புதுடெல்லி
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறையில் இருந்து தண்டனைக் கைதிகள் 600 பேர் வரை விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சிறையில் இருந்து விடுவிக்கப்படும் இந்த கைதிகளில் கொலை, பலாத்காரம், மற்றும் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றிருப்பவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள். விடுவிக்கப்படும் கைதிகள் குறித்த இறுதிக்கட்ட பட்டியலை மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது
" மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 2018, அக்டோபர் 2-ம் தேதி முதல் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி வரை நாட்டின் பல்வேறு சிறைகளில் இருந்து இதுவரை 1,424 கைதிகள் 2 கட்டங்களாக விடுவிக்கப்பட்டுள்ளனர். 3-வது கட்டமாக அக்டோபர் 2-ம் தேதியன்று 600 கைதிகள் வரை விடுவிக்கப்பட உள்ளனர்.
விடுவிக்கப்படும் கைதிகளில் ஊழல், கொலை, பலாத்கார வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள், அரசியல்வாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்.
தண்டனைக் கைதிகளில் 55 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் கைதிகள் தங்கள் தண்டனை காலத்தின் பாதிக் காலத்தை முடித்து இருந்தால் அவர்கள் கருணை, ஒழுக்கத்தின் அடிப்படையில் விடுவிக்கப்படுவார்கள்.
திருநங்கையர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறையில் தண்டனைக் கைதிகளாக இருந்தால்,அவர்கள் தண்டனையின் பாதிக்காலத்தை முடித்திருந்தால்கூட அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
அதேபோல மாற்றுத்திறனாளி கைதிகளும் கருணையின் அடிப்படையில் விடுவிக்கப்படுவார்கள். இவர்கள் அனைவரும் தங்களின் தண்டனைக் காலத்தில் பாதிக்கு மேல் சிறையில் கழித்திருந்தால் மட்டுமே பரிசீலனைக்கு எடுக்கப்படுவார்கள். அதேபோல, தூக்கு தண்டனை மற்றும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட கைதிகளும் பரிசீலனைக்கு எடுக்கப்பட மாட்டார்கள்.
அதேபோல தடா சட்டம், பொடா சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம், போக்ஸோ சட்டம், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம், அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், கறுப்புப்பணம் மற்று வரிஏய்ப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களும் விடுதலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் "
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்
பிடிஐ