பிரதமர் மோடி : கோப்புப்படம் 
இந்தியா

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா: பிரதமர் மோடி நாளை வருகை 

செய்திப்பிரிவு

புதுடெல்லி

சென்னை ஐஐடியில் நாளை நடக்கும் 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வரஉள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கான விஷயங்கள் குறித்து கருத்துக்களை பகிர்ந்திடுங்கள் என்று ட்விட்டரில் பிரதமர் மோடி கோரியுள்ளார்.

சென்னை ஐஐடியின் வைரவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் வழங்க பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் 7 நாட்கள் அரசுமுறைப் பயணமாகச் சென்றிருந்த பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார், அதன்பின், ஐ.நா. பொதுக்கூட்டத்தில் உரை, உலகத் தலைவர்களுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று இரவு பிரதமர் மோடி டெல்லி வந்து சேர்ந்தார்.

இந்நிலையில், சென்னை ஐஐடியில் நாளை நடக்கும் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். இந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் சிங்கப்பூர்-இந்தியா ஹாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை பிரதமர் மோடி வழங்க உள்ளார்.

இந்தியா ஹாக்கத்தான் முதலாம்ஆண்டு நிகழ்ச்சி கடந்த ஆண்டு நவம்பரில் சிங்கப்பூரில் நடந்தது. இப்போது 2-வது ஆண்டாக சென்னை ஐஐடியில் நடக்கிறது. உலக அளவில் உள்ள மாணவர்கள் இந்திய மாணவர்களுடன் கலந்துரையாடி, சிந்தனைகளை பகிர்ந்து, புத்தாக்கத்தில் ஈடுபட்டு, சமூகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியாக சிங்கப்பூர்-ஹாக்கத்தான் நடத்தப்படுகிறது. பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை பங்கேற்றும் நிலையில் அந்த நிகழ்ச்சியில் எந்த மாதிரியான விஷயங்களை குறிப்பிட்டு பேசலாம் என்பது குறித்து மக்களிடம் ட்விட்டரில் கருத்துக் கேட்டுள்ளார்.

அதில் " நாளை சென்னை ஐஐடியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கச் செல்கிறேன். இந்தியாவின் சிறந்த அறிவார்ந்த மாணவர்களை பார்க்க இருக்கிறேன். ஐஐடியில் படித்தவர்கள், முன்னாள் மாணவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தால் அது குறித்துப் பேசுவேன். நமோ ஆப்ஸ் மூலம் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

ஹாக்கத்தான் நிகழ்ச்சி இளைஞர்களின் சக்தியும், புத்தாக்கமும் கலந்தது. இந்தியா நீண்டகாலமாக சந்தித்துவரும் பல்வேறு சிக்கல்கள், பிரச்சினைகளுக்கு இளைஞர்களின் சந்தனையாற்றல் மூலம் தீர்வு கிடைக்கும். ஹாக்கத்தான் பரிசளிப்பு விழாவிலும் பங்கேற்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்

பிடிஐ

SCROLL FOR NEXT