புதுடெல்லி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியலமைப்பி்ல் 370-m பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மூத்த நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம் இன்று அமைத்துள்ளது.
5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூத்த நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஆர். சுபாஷ் ரெட்டி, பிஆர் காவே, சூர்யகாந்த ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்பில் 370-ம் பிரிவையும் திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக் ஆகிய பகுதிகளை பிரித்து இருபகுதிகளையும் யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்து. இந்த உத்தரவு அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏராளமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. எம்.எல் சர்மா எனும் வழக்கறிஞர்தான் முதன்முதலில் வழக்குத் தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து
தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பிலும், சஜாத் தலைமையிலான மக்கள் மாநாட்டுக் கட்சி, தனிமனிதர்கள் என பலரும் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரணை செய்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்தது. இந்த மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றப்படும் என தலைமை நீதிபதி அறிவித்தார்.
இதன்படி, மூத்த நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூத்த நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஆர். சுபாஷ் ரெட்டி, பிஆர் காவே, சூர்யகாந்த ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அமர்வு வரும் அக்டோபர் முதல் தேதியில் இருந்து இந்த வழக்கை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் 370-ம் பிரிவை மத்திய அரசு நீக்கி, குடியரசு தலைவர் உத்தரவிட்டது செல்லுபடியாகுமா என்பது குறித்து இந்த அரசியல்சாசன அமர்வு விசாரிக்கும்.
பிடிஐ