மும்பை
நமது அண்டை நாட்டில் அரசே தீவிரவாதத்தை வளர்த்து, ஆதரிப்பதுதான் மிகப்பெரிய சவால், இந்தியாவை சீர்குலைக்க அண்டை நாடு விரும்புகிறது என்று பாகிஸ்தான் மீது மறைமுகமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.
ஐஎன்எஸ் கந்தேரி நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஐஎன்எஸ் நீலகிரி போர்க்கப்பலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நாம் வளர்ச்சியில் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். நமது வணிகரீதியான நலன்கள் அனைத்தும் பரந்திருக்கின்றன. எந்த அளவுக்கு பரந்ததாக நம்முடைய இலக்குகள் இருக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்துகளும் இருக்கின்றன.
நம்முடைய அண்டை நாடு நம்மை சீர்குலைக்க விரும்புகிறது. அண்டை நாட்டில் ஆளும் அரசே தீவிரவாதத்தை வளர்த்துவிடுவதும், ஆதரவு அளித்துவருவதும் நமக்கு மிகப்பெரிய சவாலாகும்.
ஆனால் நாம் வலிமையான மனோதிடத்துடன் இருக்கிறோம், எந்தவிதமான கடினமான முடிவுகளையும் எடுக்க அரசு தயங்காது. உதராணமாக ஜம்முகாஷ்மீரில் 370 பிரிவை நீக்கிய முடிவையும் குறிப்பிடலாம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், அந்த மாநிலத்தில் வளர்ச்சி புதிய இலக்கை நோக்கி நகரும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியா இன்று உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் நாடுகளின் பட்டியலை நோக்கி நகர்ந்து வருகிறது.
நம்முடைய விமானம் தாங்கி கப்பல்களையும், நீர்மூழ்கி கப்பல்களையும் நாமே வடிவமைக்கிறோம். இதுவரை 51 கப்பல்கள் கட்டுவதற்கு நாம் பல்வேறு கப்பல் கட்டும் தளங்களில் ஆர்டர் கொடுத்துள்ளோம், இதில் 49 உள்நாட்டிலேயே கட்டப்படுகிறது
கடற்கொள்ளையைத் தடுக்கும் வகையில் நமது கடற்படை மிகுந்த வலிமையுடனும், தீவிர ரோந்துப்பணியிலும் இருந்து வருகிறது நம்முடைய வர்த்தகத்தில் 95 சதவீதத்தில் 70 சதவீதம் கடல்வழியாகத்தான் நடக்கிறது. தீவிரவாதம், கடற்கொள்ளை போன்றவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆதலால், நமது கடற்படையை நவீனமயமாக்கவும், திறன் உள்ளதாக மாற்றவும் தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக நவீன ஆயுதங்கள், சென்சார்கள், ரேடார்கள் போன்றவை வழங்கப்படுகின்றன. இந்தியப் பெருங்கடலில் இந்தியக் கடற்படை என்பது மிகப்பெரிய பாதுகாப்பு வழங்கும் பிரிவாக இருந்து வருகிறது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்
, பிடிஐ