புதுடெல்லி
அயோத்தி தொடர்பாக 2003-ம் ஆண்டு தொல்லியல்துறை அளித்த அறிக்கை வெறும் கருத்தல்ல, நீதிமன்ற உத்தரவுபடி ஆய்வு செய்து அளிக்கப்பட்ட அறிக்கை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அயோத்தி ராம ஜென்மபூமி பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக மத்தியஸ்தர் குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. ஆனால் சமரச முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல்சாசன குழு வழக்கை விசாரிக்கிறது.
இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெறுவதால் அதற்கு முன் தீர்ப்பு வழங்குவது அவசிய மாகும். இல்லாவிடில் ஒட்டுமொத்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்படும்.
எனவே அக்டோபர் 18-ம் தேதிக்குள் அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் விசாரணைக்கு இடையே மத்தியஸ்தர் குழு மூலம் மனு தாரர்கள் பிரச்சினையை தீர்த் துக்கொள்ள விரும்பினால் அதற்கு தடையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன்பு முஸ்லிம் அமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மீனாட்சி அரோரா கூறுகையில் ‘‘தொல்லியல் துறையினரின் அறிக்கை என்பது வெறும் கருத்து தான். இது அவர்களின் திட்டவட்டமான ஆய்வு அல்ல. அவ்வாறு அவர்கள் கூறும்போது அதற்கான ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டிருக்க வேண்டும். இது வெறும் ஆலோசனையாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியுமே தவிர நீதிமன்ற சான்றாக கருத முடியாது’’ எனக் கூறினார்.
இந்நிலையில் அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாபர் மசூதிக்கு அடியில் மிகப்பெரிய கட்டிடம் இருந்ததற்கான தடயங்கள் இருப்பதாக 2003-ல் வெளியான இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழக அறிக்கையை எழுதியவர் குறித்து கேள்வி எழுப்பியதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துவிட்டதாக முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆஜரான ராஜீவ் தவன் நேற்று மன்னிப்பு கோரினார்.
இந்தநிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கூறியதாவது:
பாபர் மசூதி, ராமஜென்மி குறித்து அலகபாத் உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஆய்வு செய்த இந்திய தொல்லியல்துறை, தடயங்கள் இருப்பதாக 2003-ல் தெரிவித்த அறிக்கை மிக முக்கியமானது.
இது வெறும் அறிக்கை அல்ல. அலகபாத் உயர்நீதிமன்ற உத்தரவுபடி தொல்லியல்துறை நடத்திய ஆராய்ச்சி குறித்த அறிக்கை. எனவே இதனை சாதாரண கருத்தகாக கருத முடியாது. அகழ்வாய்வு செய்து அவர்கள் கண்டுபிடித்ததன் அடிப்படையில் நீதிபதிகளுக்கு தஙகள் அறிக்கையை அளித்துள்ளனர்.
எனவே இது நன்கு ஆய்வு செய்து அளிக்கப்பட்ட அறிக்கையாக மட்டுமே பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.