இந்தியா

எடியூரப்பா அமைத்த குழுவை கலைக்க உத்தரவிட்ட  பாஜக தலைமை 

செய்திப்பிரிவு

பெங்களூரு
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பெங்களூரு மாநகராட்சி மேயர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவை கலைக்குமாறு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.

பாஜகவில் 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அரசு நிர்வாகத்திலும், தீவிர அரசியலிலும் இருக்க வேண்டாம் என நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கெனவே 75 வயதைக் கடந்து விட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு எம்.பி. பதவி வழங்கவில்லை.

எனினும் 76 வயதாகும் எடியூரப்பா கர்நாடக முதல்வராக அறிவிக்கப்பட்டார். கர்நாடகாவில் பாஜக வெற்றிக்கு எடியூரப்பா முக்கியக் காரணம். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி கட்சி பிரச்சாரம் செய்தது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 28 இடங்களில் 26 தொகுதிகளை பாஜக கைப்பற்றியதற்கும் எடியூரப்பாவின் கடினமான உழைப்பு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் எடியூரப்பாவை ஒதுக்கி வைப்பதும் பாஜக தலைமைக்கு கடினமான சூழலாக உள்ளது.

எனினும் அவரது அதிகாரத்தை குறைக்கும் வகையில் துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியிலும், ஆட்சியிலும் எடியூரப்பாவின் அதிகாரத்தை குறைக்கும் பணிகளை பாஜக தலைமை தொடர்ந்து செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பாஜக எம்எல்ஏ ரகு தலைமையில் குழு ஒன்றை முதல்வர் எடியூரப்பா அமைத்து இருந்தார். வருவாய்த்துறை அமைச்சர் அசோக்கும் முதல்வருடன் இணைந்து இந்த புதிய குழுவை சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

இதன்படி அமைச்சர் அசோக், பெங்களூரு எம்எல்ஏக்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டார். இதனை அறிக்கையாக முதல்வர் எடியூரப்பாவுக்கு சமர்பிக்கவுள்ளார். இதனிடையே இந்த குழுவை கலைக்குமாறு பாஜக தலைமை எடியூரப்பாவுக்கும், அசோக்குக்கிற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

SCROLL FOR NEXT