புதுடெல்லி
தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பங்களிப்பு செய்தவர்களுக்கு சர்தார் வல்லபாய் படேல் பெயரில் குடிமகனுக்கான உயரிய விருதை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"சர்தார் வல்லபாய் படேல் பெயரில் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்காக உழைத்தவர்களுக்கு 'சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒருமைப்பாடு விருது' வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விருதில் ஒரு பதக்கமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். இந்த விருது பெரும்பாலும் உயிரிழந்தவர்களுக்கு தரப்படாது. மிகவும் அரிதினும், அரிதான சூழலில் மட்டுமே உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த விருதோடு எந்த விதமான பணமுடிப்பும் தரப்படாது, ஓர் ஆண்டுக்கு 3 விருதுகளுக்கு மேல் வழங்கப்படாது. இந்த விருது தேசிய ஒற்றுமை நாளில் அதாவது அக்டோபர் 31-ம் தேதி சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தன்று வழங்கப்படும்.
தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தவர்கள், இந்தியாவின் உயர்ந்த மதிப்புகளையும், ஒற்றுமையையும் காத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருது குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கப்படும் நாளில், குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.
இந்த விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், அமைச்சரவைச் செயலாளர், பிரதமரின் முதன்மைச் செயலாளர், குடியரசுத் தலைவரின் செயலாளர், உள்துறைச் செயலாளர், பிரதமரால் தேர்வு செய்யப்படும் 4 பிரபலமானவர்கள் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள்.
இந்த விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த எந்த ஒரு குடிமகனும், நிறுவனமும், அமைப்பும் மற்றொரு தனிமனிதரைப் பரிந்துரை செய்யலாம். தனிமனிதர்களும் தங்களை விருதுக்கு பரிந்துரைத்துக்கொள்ள முடியும். மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், அமைச்சகங்கள் ஆகியவையும் விருதுக்கான பரிந்துரைகளை அனுப்பலாம்
ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுக்கான பரிந்துரைகள் ஏற்கப்படும். இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் இதற்காக உள்துறை அமைச்சகம் உருவாக்கிய இணையதளத்தில் இருக்கும்.
அனைத்து குடிமக்களும் மதம், சாதி, இனம், பாலினம், பிறப்பிடம், வயது, தொழில் என பாகுபாடு இல்லாமல் இந்த விருதுக்குத் தகுதயானவர்கள்".
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிடிஐ