அர்விந்த் கேஜ்ரிவால் | கோப்புப் படம் 
இந்தியா

டெல்லியில் என்ஆர்சி வந்தால் முதலில் வெளியேற வேண்டியது பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தான் : கேஜ்ரிவால் பேட்டி

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

புதுடெல்லியில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவந்தால் பாஜக தலைவர் மனோஜ் திவாரி டெல்லியைவிட்டு முதலில் வெளியேற வேண்டி இருக்கும் என்று புதுடெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் கடந்த செப்டம்பர் 1 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி 19 லட்சம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட உள்ளதாக வடகிழக்கு மாநிலங்களும் அறிவித்தன.

சென்ற வாரம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ''விரைவில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்தியர்கள் சென்று சட்டவிரோதமாக வசிக்க முடியுமா? அப்படி இருக்கும்போது இந்தியாவில் மட்டும் வெளிநாடுகளின் மக்கள் எப்படி சட்ட விரோதமாக வசிக்க முடியும்? ஆகவே தான் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா
முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்'' என்று பேசியிருந்தார்.

இந்தக் கருத்தை ஆதரிக்கும்விதமாக நேற்று பாஜகவைச் சேர்ந்த வடகிழக்கு டெல்லி எம்பியான மனோஜ் திவாரி, டெல்லியில் தேசிய குடிமக்களின் பதிவேடு (என்.ஆர்.சி) அவசியம் தேவை என்று கோரிக்கை வைத்து பேசியிருந்தார்.

அதில் ''சட்டவிரோதமாக வந்து குடியேறியுள்ளவர்களால் நிறைய ஆபத்து உள்ளது. அடுத்த ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கோரிக்கை பாஜகவின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாகவே இருக்கும். இந்திய குடிமக்களிடமிருந்து சட்ட விரோத குடியேறிகளை தனித்துக்காட்டுவதற்காகவே என்.ஆர்.சி. உருவாக்கப்பட்டது'' என்று மனோஜ் திவாரி தெரிவித்திருந்தார்.

இதற்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பதில் அளித்து பேசியுள்ளார். இன்று அவர் ஊடகங்களிடம் கூறியுள்ளதாவது:

டெல்லியில் ஒரு பத்திரிகையாளர் மீதான தாக்குதல் நடந்துள்ளதற்கு டெல்லியில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளவர்கள்தான் பொறுப்பு என்று பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதுமட்டுமின்றி டெல்லியில் என்.ஆர்.சி. நடைமுறைப்படுத்தப்படுவதுதான் இதற்கு தீர்வு என்றும் கூறுகிறார். மனோஜ் திவாரி கூறுவதுபோல டெல்லியில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தும் நிலை ஏற்பட்டால், அவ்வாறு முதலில் டெல்லியைவிட்டு வெளியேற வேண்டியது மனோஜ் திவாரிதான்.

இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதேபோல, தேசிய குடிமக்கள் பதிவேடு உ.பியில் அமல்படுத்தப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆதரித்து பேசியதை அடுத்து உ.பி.யில் என்.ஆர்.சி கொண்டு வந்தால் யோகி ஆதித்யநாத் வெளியேற வேண்டியிருக்கும் என்று அகிலேஷ் யாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

-ஏ.என்.ஐ

SCROLL FOR NEXT