புதுடெல்லி
பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி), அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவன்சில்(ஏஐசிடிஇ) ஆகியவற்றுக்கு பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கும் மசோதாவை மத்திய அமைச்சரவையில் அடுத்த மாதம் பரிசீலிக்கப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன
யுஜிசி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து பல்கலைக்கழக மானியக் குழுவை நீக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கடந்தஆண்டு திட்டமிட்டது. இதற்கான வரைவு மசோதா இணையதளத்தில் வைக்கப்பட்டு மக்களிடம் கருத்துக்களும், ஆலோசனைகளும் கேட்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து, அந்த இரு அமைப்புகளையும் நீக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மனிதவளத்துறை மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், " யுஜிசி மற்றும் ஐஏசிடிஇக்கு மாற்றாக இந்திய உயர் கல்வி ஆணையம் எனும் ஒற்றை ஒழுங்கமைப்பு குழு கொண்டுவரப்பட உள்ளது. அனைத்து மாநிலங்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டு, கருத்துக்கள் கேட்கப்பட்டு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை வரும் அக்டோபர் மாதம் அமைச்சரவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. யுஜிசி சட்டம் 1951 மற்றும் ஏஐசிடிஇ 1987-ம் ஆண்டு சட்டத்தை மாற்றிவிட்டு தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படுகிறது. " எனத் தெரிவித்தார்
ஜூலை மாதம் நாடாளுமனறத்தில் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பேசுகையில், " தேசிய உயர்கல்வி ஆணையம் கொண்டுவருவதன் நோக்கம், தரமான கல்வி, கல்விநிலையங்களை தரமாக பராமரித்தல், சிறப்பாகச் செயல்படும் கல்விநிலையங்களுக்கு சுயாட்சிஅதிகாரத்தை ஊக்குவித்தல், புத்தாக்கம், திறன்மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றுக்காக கொண்டுவரப்படுகிறது. எங்கள் நோக்கம் போட்டியான உலக சூழலில் அனைவருக்கும் வாய்ப்புகள் முழுமையாக கிடைக்க வேண்டும், உயர்கல்வி முழுமையான வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதுதான்" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ