தோடா மாவட்டத்தின் தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுடன் உரையாடும் வடக்கு ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ரன்பீர் சிங். | படம்: ஏஎன்ஐ. 
இந்தியா

தேசத்தைக் கட்டியெழுப்பும் வகையில் காஷ்மீர் மாணவர்கள் சிறப்பாக வர வேண்டும்: ராணுவத் தளபதி உற்சாகப் பேச்சு

செய்திப்பிரிவு

உதம்பூர்.

''காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவின் சிறந்த குடிமக்களாக செழிப்புடனும் சிறப்பாகவும் வர வேண்டும்'' என்று மாணவர்களுடன் உரையாடிய வடக்கு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் உற்சாகத்தோடு பேசினார்.

காஷ்மீரில் 370-வது பிரிவை ரத்து செய்து இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றிய பிறகு மத்திய அரசு தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்வது இன்னும் முழுமையாகவில்லை. இதனைத் தணிக்க வடக்கு ராணுவத் தளபதி காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் சில மாணவர்களை சந்தித்து உரையாடினார்.

தோடா மாவட்டத்தின் தொலைதூரப் பள்ளிகளின் பெண்கள் உட்பட 40 மாணவர்கள், உத்தம்பூர் ராணுவத் தலைமையகத்திற்கு நேற்று வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ராணுவ நிதியுதவியுடன் கல்விச் சுற்றுலா மேற்கொள்கிறார்கள்.

பஞ்சாப்பில் உள்ள ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற பகுதிகள் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய சில பகுதிகளுக்கும் செல்லும் அவர்களுக்குத் துணையாக நான்கு ஆசிரியர்கள் செல்கிறார்கள். அவர்களிடம் நேற்று பிற்பகல் வடக்கு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் உற்சாகத்துடனும் ஊக்கம் அளிக்கும் வகையிலும் உரையாடினார்.

மாணவ, மாணவிகளிடம் ராணுவத் தளபதி கூறியதாவது:

''தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மேலும் இந்திய ஆயுதப் படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் சிறப்புடனும் செழிப்போடும் வர வேண்டும் என்பதைக் காண விரும்புகிறோம். இந்தியாவின் பொறுப்புள்ள குடிமக்களாக கடினமாக உழைக்கவும், தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.

நான்கூட பஞ்சாப்பில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவன்தான். வாய்ப்பு உங்கள் கதவைத் தட்டும்போது, அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சுற்றுலாப் பயணம் உங்களுக்குள் தேசப்பற்றை சிறப்பாக வளர்க்கும் என்று நம்புகிறேன். இந்த முயற்சி பல்வேறு தொழில் விருப்பங்களை வெளிப்படுத்துவதோடு புகழ்பெற்ற நபர்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவும்.

​மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இந்தச் சிறப்பான பயணத்திற்கு ஏற்பாடு செய்த ராணுவத்தின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.''

இவ்வாறு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் தெரிவித்தார்.

- ஏஎன்ஐ

SCROLL FOR NEXT