பாஜக தலைவர் சின்மயனாந்தை போலீஸார் அழைத்துச் சென்ற காட்சி : கோப்புப்படம் 
இந்தியா

பலாத்கார வழக்கு: பாஜக தலைவர் சின்மயானந்த் ஜாமீன் மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

ஷாஜஹான்பூர்

சட்டக்கல்லூரி மாணவியைப் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக தலைவர் சின்மயானந்த் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் (வயது 72). இவர் மீது உத்தரப் பிரதேசம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் 27-ம் தேதி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
புகார் அளித்த மாணவி திடீரென காணாமல் போனதையடுத்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்தப் பெண் அளித்த புகாரை விசாரிக்க தனி சிறப்புக் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. சிறப்புக் குழுவின் விசாரணயை அலகாபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு சட்டக்கல்லூரி மாணவியிடமும், மாணவர்களிடமும் விசாரணை நடத்தி கடந்த 20-ம் தேதி பாஜக தலைவர் சின்மயனாந்தை கைது செய்தது. அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்நிலையில் ஜாமீன் கோரி, ஷாஜஹான்பூர் தலைமை ஜூடிசியல் நீதிமன்றத்தில் சின்மயானந்த் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து, செசன்ஸ் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டார்.
இதனிடையே சின்மயானந்திடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய், சச்சின், விக்ரம் ஆகிய 3 இளைஞர்களும் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, சிறப்பு விசாரணைக் குழுவினர் அந்த 3 இளைஞர்களையும் அழைத்துச் சென்று அவர்கள் வீசி எறிந்த மொபைல் போன் குறித்து இன்று தேடினார்கள். அவர்கள் ராஜஸ்தான் அருகே மெஹந்திபூர் பாலாஜி எனும் இடத்தில் மொபைல் போனை வீசி எறிந்ததாகத் தெரிவித்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு மொபைல் போனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சிறப்புப் படையினர் இறங்கியுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிடிஐ

SCROLL FOR NEXT