கொல்கத்தா
சாரதா சிட்பண்ட் மோசடியில் தொடர்புடைய கொல்கத்தா முன்னாள் போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் முன்ஜாமீ்ன் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஆலிப்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் மனுவை ரத்து செய்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். சிபிஐ தன்னை வேட்டையாட முயல்கிறது என்று மனுவில் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடந்த ரூ.2500 கோடி சாரதா சிட்பண்ட் மோசடி கொல்கத்தா போலீஸ் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் விசாரித்தார். ஆனால், விசாரணை நியாயமாக நடக்கவில்லை எனக் கூறி அதை சிபிஐக்கு மாற்றி கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது
இந்த வழக்கை விசாரித்த வந்தபோது ஏராளமான ஆவணங்களை அழித்துவிட்டதாகவும், ஆவணங்களை முறையாக ஒப்படைக்கவில்லை என்றும் சிபிஐ குற்றம் சாட்டி ராஜீவ் குமாரைக் கைது செய்ய முயன்றது. ஆனால், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பால் கைதில் இருந்து தப்பித்தார். தற்போது மாநில சிஐடி கூடுதல் இயக்குநராக ராஜீவ் குமார் இருந்து வருகிறார்.
இந்நிலையில், ராஜீவ் குமாரை கைது செய்யத் தடையில்லை என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்தநிலையில் அவரை விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அளித்தது. ஆனால் ராஜீவ் குமார் செப்டம்பர் 25-ம் தேதி வரை விடுமுறையில் இருப்பதால் சிபிஐ பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை, தலைமறைவாக இருந்து வருகிறார்.
ராஜீவ் குமாரை முறைப்படி கைது செய்ய ஆலிப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதிக் கேட்டபோது, அதற்கு தடையில்லை என நீதிபதி தெரிவித்துவிட்டார். அதே நீதிமன்றத்தில் ராஜீவ் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் கடந்த 21-ம் தேதி தள்ளுபடி செய்தது.
இதனால் தலைமறைவாக இருக்கும் ராஜீவ் குமாரை கண்டுபிடிக்க பல்வேறு சிறப்பு பிரிவுகளை சிபிஐ அமைத்து தேடி வருகிறது.
இந்த சூழலில் போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் குமார் சார்பில் அவரின் வழக்கறிஞர் தேபாஷிஸ் ராய் தாக்கல் செய்தார். அதில், " ராஜீவ் குமாரை சிபிஐ வேட்டையாட முயல்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.
இதைக் கேட்ட நீதிபதி எஸ். முன்ஷி, " தேவைப்பட்டால் ராஜீவ் குமாரை சிபிஐ அமைப்பிடம் சரண் அடையக் கூறுங்கள்" என்று தெரிவித்தனர். இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி முன்ஷி, தாஸ்குப்தா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
நாளை விசாரணையின் முடிவில் ராஜீவ் குமாருக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது மனு தள்ளுபடி செய்யப்படுமா எனத் தெரியவரும்.
பிடிஐ