இந்தியா

கர்நாடக இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை: குமாரசாமி உறுதி

செய்திப்பிரிவு

பெங்களூரு

கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸும் மஜத வும் இணைந்து கடந்த 14 மாதங்களாக கூட்டணி ஆட்சி நடத்தின. இதற்கு எதிராக 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் என மொத்தமாக‌ 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து சுயேச்சைகளின் ஆதரவுடன் எடியூரப்பா தலைமையில் கடந்த ஆகஸ்டில் பாஜக ஆட்சி அமைத்தது.

கர்நாடகாவில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் ராணி பெண்ணூரு, காகவாடா ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 15 தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸும் மஜதவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வரும் நிலையில் மஜத தேசியத் தலைவர் தேவகவுடா ‘‘காங்கிரஸ், மஜத கூட்டணி முறிந்து விட்டது. 15 இடங்களிலும் மஜத தனித்துப் போட்டியிடும். எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும்'' என அறிவித்தார்.

222 எம்எல்ஏக்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 106 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பாஜக‌ ஆட்சி அமைத்துள்ளது. இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 15 தொகுதிகளில் 6 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும். இதனால் 6 இடங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், ''கர்நாடக இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு. 15 தொகுதிகளிலும் உள்ளூர் வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டுள்ளோம். வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்'' என்று குமாரசாமி தெரிவித்தார்.

          
SCROLL FOR NEXT