இந்தியா

வரலாற்றுச் சிறப்பு மிக்க தினம்: ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர்கள் பாராட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி
ஐ.நா. கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவுக்கு 7 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். முதல் நிகழ்ச்சியாக ஹூஸ்டன் நகரில் அமெரிக்க இந்தியர்கள் சார்பில் ஹவுடி மோடி நிகழ்ச்சி நடந்தது.

ஹூஸ்டன் நகரின் என்ஆர்ஜி அரங்கில் நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க இந்தியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப்பும், பிரதமர் மோடியும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றினர்.
இதுகுறித்து பாஜக தலைவர்கள் பலரும் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில் ‘‘பாகிஸ்தானின் தீவிரவாதம் குறித்து மோடி பேசியதன் மூலம் உலக நாடுகளுக்கு புதிய இந்தியாவின் தகவல் சென்றடைந்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமைக்கு நன்றி. தீவிரவாத எதிர்ப்பு விஷயத்தில் உலக நாடுகள் இன்று இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதியாக ஆதரிக்கின்றன. இந்த பிரமாண்ட நிகழ்ச்சியின் மூலம் மோடி அரசின் வலிமையை உலகம் உணர்ந்துள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில் ‘‘பழமையான மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் கரம் கோர்த்து நமக்கு நம்பிக்கையை அளித்துள்ளதுடன் எதிர்காலத்திற்கும் உறுதி அளித்துள்ளன. வரலாறு படைக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

உலக அரசியலில் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தினம். இரண்டு பலம் பொருந்திய ஜனநாயக நாடுகள் ஒன்றாக கூடி தங்கள் கருத்துக்களை, கனவுகளை பகிர்ந்து கொண்டுள்ளன. இதற்கு முன்பு யாரும் இதுபோன்ற நிகழ்வை கண்டதில்லை. ஹவுடி மோடி நிகழ்ச்சி முன்னெப்போதும் இல்லாத ஒன்று. உலக வரைபடத்தில் இந்தியா அழியாத காலடி தடத்தை வலிமையாக்கியுள்ளது’’ என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT