புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தனது அதிகாரத்தை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தியது இல்லை என்று அவர் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து கடந்த 2007-ம் ஆண்டு ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு அப்போது காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உதவினார். அவருக்கான நிதிமைச்சர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அனுமதியளித்தார் என்று சிபிஐ குற்றம் சாட்டியது. இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு மே 15-ம் தேதி முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சிபிஐ காவல் முடிந்த நிலையில், அக்டோபர் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில் சிதம்பரம் சார்பில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று நீதிபதி சுரேஷ் கெய்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனு தொடர்பாக சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ''ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. அவர் வெளிநாடு தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டு இருந்தோம். ஆதலால், அவருக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், "மக்களின் நம்பகத்தன்மையைக் குலைக்கும் விதமாக சட்டவிரோதாக எந்தப் பணியையும் நான் செய்யவில்லை. எனக்கு எதிராக சிபிஐ இதுவரை எந்த வலிமையான ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. என் பணிக்காலத்தில் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் என் பதவியை சுயலாபத்துக்காகப் பயன்படுத்தவில்லை. என் செயலால் அரசுக்கு எந்தவிதத்திலும் இழப்பு ஏற்படுத்தவில்லை.
இந்த வழக்கில் எந்தவிதமான அரசுப் பணமும் இல்லை. இந்த வழக்கு வங்கி மோசடியோ அல்லது நாட்டை விட்டு பணத்தை எடுத்துச் சென்றுவிட்டதாகவோ அல்லது முதலீட்டாளர்களின் பணத்தைத் திருடியதாகவோ இல்லை.
இந்த வழக்கில் இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தில் நம்பகத்தன்மை இல்லை. இந்த வழக்கில் அவர் அரசு சாட்சியாக மாறிவிட்டார். தனது மகளைக் கொலை செய்த வழக்கில் அவரும், அவரின் கணவரும் சிறையில் சிபிஐ அமைப்பால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை நான் வெளிநாடுகளுக்கு எந்தவிதத்திலும் நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் செல்லமாட்டேன் என்பதற்கு உறுதியளிக்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டது.
பிடிஐ