இந்தியா பன்முகத்தன்மை, மத நல்லிணக்கம் கொண்ட நாடு என்று மதுராவுக்கு வருகை தந்துள்ள திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.
தலாய் லாமா நேற்று மாலை மதுராவுக்கு தனது இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார். அவர் மதுராவில் பிருந்தாவன், யமுனை நதிக்கரை, கோட்டைகள், அரண்மனைகள், மீரா, கிருஷ்ணன் கோயில்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
அவரது பயணத்தின் ஒரு பகுதியாக இங்குள்ள வரலாற்று நகரமான கோகுலில் உள்ள ராமன்ரேதி ஆசிரமத்திற்கு விஜயம் செய்தார். இந்துக் கடவுளான கிருஷ்ணர் தனது குழந்தைப் பருவத்தில் கோகுலத்தில் வளர்ந்ததாகக் கூறப்படுகிறது.
திபெத்திய ஆன்மிகத் தலைவர் ஆன்மிக ஆசிரமத்திற்கு வந்ததும் ஒரு பாரம்பரிய இந்தியப் பாணியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பயிற்சி பெற்ற யானையால் அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
ஆசிரமம் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட தலாய் லாமா கூறியதாவது:
''இந்தியாவின் பெரும் பன்முகத்தன்மையையும், மத நல்லிணக்கத்தின் மீதான அதன் உறுதியான நம்பிக்கையையும் பாராட்டுகிறேன். அமைதி மற்றும் நட்பின் அடிப்படையில் இந்தியா உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
இந்தியா ஒரு மாறுபட்ட நாடு, அங்கு வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து வாழ்கின்றனர். வளர்ந்துவரும் வருங்காலச் சந்ததியினருக்கு இந்தியப் பண்பாட்டின் முக்கிய அம்சமான அகிம்சையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும்.
குழந்தைகள் எந்தக் கல்வியைப் படித்தாலும் பரவாயில்லை. ஆனால் அவர்களுக்கு அகிம்சையை மட்டும் போதிக்கத் தவறக்கூடாது. இந்த உலகத்தை அமைதி, அன்பு, நட்பு ஆகியவற்றைக் கொண்டுதான் ஒன்றிணைக்க முடியும்''.
இவ்வாறு தலாய் லாமா பேசினார்.
கர்ஷ்னி ராமன்ரேதி ஆசிரமத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 'லாமா பார்க்' என்ற பூங்காவைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தலாய் லாமா இன்று கலந்துகொள்கிறார்.