புனே:
மும்மொழி கொள்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் புனே நகரில் நேற்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
வெளிநாடுகளில் இந்திய பிரதமருக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயம். அவர் நமது நாட்டின் பிரதிநிதியாக வெளிநாடு செல்கிறார். அதேநேரம் அவர் இந்தியாவில் இருக்கும்போது அவரிடம் கேள்விகள் எழுப்ப நமக்கு உரிமை உள்ளது.
ஒரே நாடு ஒரே மொழி என்ற வகையில் இந்தியை திணிப்பதை கடுமையாக எதிர்க்கிறேன். அதேநேரம் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறேன். இந்தி, இந்துத்துவா கொள்கைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது நாட்டின் நலனுக்கு எதிரானது.
கேரளாவில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஆனால் மகாராஷ்டிராவில் பிரிவினைவாதம் தூண்டப்படுகிறது. மராத்தி மன்னர் சிவாஜியின் படையில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர். அனைத்து சமுதாயத்தினருக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றே மன்னர் சிவாஜி வலியுறுத்தினார். இதை மராத்தி மக்கள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.