பனாஜி,
கோவாவில் மாநில வேலை வாய்ப்புகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய ஆதாரைக் கட்டாயமாக்கியதன் மூலம் ஆளும் பாஜக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து கோவா பிரதேச காங்கிரஸ் குழு தலைவர் கிரிஷ் சோடங்கர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கோவாவில், மாநில வேலை வாய்ப்புகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய ஆதாரைக் கட்டாயமாக்கியுள்ளனர். இது, நேரடி பணப் பயன்பாடுகளற்ற எதற்கும் ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ள செயலாகும். ஆளும் பாஜக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளது.
உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில், அரசியலமைப்பின்படி ஆதார் அவசியம் என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால் மொபைல் இணைப்புகள் அல்லது பள்ளி சேர்க்கை, வங்கிக் கணக்குகளுக்கு இது கட்டாயமில்லை என்று தீர்ப்பளித்தது.
எனினும், வருமான வரி (ஐ.டி) வருமானத்தை தாக்கல் செய்ய நிரந்தரக் கணக்கு எண் (பான்) ஒதுக்கீடு கட்டாயமாகும்.
வேலை வாய்ப்பு பரிமாற்றத்தில் பதிவுசெய்த ஒருவர் இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகினால், பிப்ரவரியில் 'ஆதார் கட்டாய' அறிவிப்பு வெளியிடப்பட்ட உத்தரவின்படி இவ்வகையிலான வேலை வாய்ப்பு ஆள் தேர்வுகளை ரத்து செய்ய இது வழிவகுக்கும்.
முந்தைய மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் வேலைவாய்ப்பு அட்டைகளுக்குப் பதிலாக நிரந்தர வேலை வாய்ப்பு அட்டைகள் வழங்கப்படுவது மிகவும் தவறானது. அத்தகைய நிரந்தர அட்டைகளின் தீமை என்னவென்றால் தவறான வேலை பெற்றுவிடவே வழிவகுக்கும். இதுதவிர, இதன்மூலம் தவறான வேலை வாய்ப்பு புள்ளிவிவரங்கள் வழங்கப்படும். அவரது பணி நிலைமை குறித்து புதிய தகவல்களை இதில் பெற முடியாது. மேலும் அவர் வேறு வேலை தேடுவதற்கான புதுப்பித்தலுக்கும் இதில் வாய்ப்பில்லை. விண்ணப்பதார் வேறு வேலை பெற்றாரா? அல்லது இறந்துவிட்டாரா அல்லது இடம்பெயர்ந்து சென்றுவிட்டாரா போன்ற புள்ளிவிவரத்தையும் பெறமுடியாத நிலையை நிரந்தர அடையாள அட்டை வழங்கும்''.
இவ்வாறு கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.