இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸும் மஜத வும் இணைந்து கடந்த 14 மாதங் களாக கூட்டணி ஆட்சி நடத்தின. இதற்கு எதிராக 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் என மொத்தமாக 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதை யடுத்து சுயேச்சைகளின் ஆதரவு டன் எடியூரப்பா தலைமையில் கடந்த ஆகஸ்டில் பாஜக ஆட்சி அமைத்தது.
கர்நாடகாவில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் ராணி பெண்ணூரு, காகவாடா ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் நடத்து வதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள தால் 15 தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸும் மஜதவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வரும் நிலையில் மஜத தேசிய தலைவர் தேவகவுடா நேற்று கூறியபோது, ‘‘காங்கிரஸ், மஜத கூட்டணி முறிந்து விட்டது. 15 இடங்களிலும் மஜத தனித்து போட்டியிடும். எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட் பாளர்கள் தேர்வு ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும்'' என கூறியுள் ளார்.
222 எம்எல்ஏக்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 106 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 15 தொகுதிகளில் 6 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பாஜக ஆட்சியை தக்கவைத் துக் கொள்ள முடியும். இதனால் 6 இடங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே 15 இடங்களிலும் வெற்றிப் பெறுவதற்கான திட்டங் களை வகுத்து, ஆட்சியைக் காப் பாற்றிக் கொள்ள பாஜக முடிவெடுத்துள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களையே மீண்டும் நிறுத்தலாமா? அதற்கு நீதிமன்ற உத்தரவு எதிராக அமைந் தால் அவர்களின் ஆதரவாளர்களை நிறுத்தலாமா? பாஜகவினரை நிறுத்தலாமா என பாஜக மேலிடம் ஆலோசித்து வருகிறது.
இடைத்தேர்தல் முடிவுகள் எடியூரப்பா ஆட்சியின் ஆயுளை தீர்மானிக்கும் என்பதால் இந்த தேர்தல் கர்நாடகாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.