புதுடெல்லி,
டெல்லியில் தற்போது துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவதை அடுத்து போலீஸார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கிழக்கு டெல்லியில் உள்ள தாஹிர்பூர் பகுதியிலிருந்து 5 துப்பாக்கிகளையும் 500 தோட்டாக்களையும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. ஆயுதங்கள் வைத்திருந்த கடத்தல்காரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொது இடங்களில் மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது அமெரிக்கா, மெக்சிகோ போன்ற இடங்களில் சர்வசாதாரணமாகிவிட்டது என்று நாம் கவலைப்படும் அதேவேளை, இன்று இந்தியாவின் தலைநகரமான டெல்லியிலும் துப்பாக்கி கலாச்சாரம் பெருகிவருதை மறுக்க முடியாத நிலையில் இருக்கிறோம். டெல்லியில் ஆயுதக் கலாச்சாரம் பெருகி வருவதைத் தடுப்பதற்கென்றே சிறப்புக் காவல் படைப் பிரிவு நியமிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பரவலைக் கண்காணித்து வரும் அவர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் 23 அன்று டெல்லியில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதற்கு மறுநாளே பொதுஇடங்களில் துப்பாக்கியால் சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீஸார் தனிக்குழுக்களை அமைத்து அவர்களைத் தேடி வந்தனர். அதேபோல, கடந்த மே 19 அன்று டெல்லியில், நேற்று இரண்டு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று நடந்த துப்பாக்கிச் சூடு
இன்று காலை நடந்த சம்பவம் ஒன்றில் கிழக்கு டெல்லியில் மது விஹார் அருகே 59 வயதான உஷா தேவி என்பவர் தனது கணவருடன் தனியார் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உஷா தேவி டெல்லியில் ஜகத்புரியில் வசிப்பவர். கணவரை அவர்களின் காரில் டயாலிசிஸ் செய்வதற்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அவரது கணவர் ஒரு கோயிலில் பிரார்த்தனை செய்ய காரில் இருந்து இறங்கியபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆண்கள் காரின் அருகே நின்று அந்தப் பெண்ணை நோக்கிச் சுட்டனர். உஷா தேவி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
ஆயுதக் கடத்தல்காரர் கைது
இந்நிலையில், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு டெல்லி தாஹிர்பூர் பகுதியில் ஆயுதக் கடத்தல் பரிமாற்றங்கள் நடைபெறுவதாகத் தகவல் கிடைத்தது. டெல்லி தாஹிர்பூர் பகுதியைச் சேர்ந்த பெரிய ஆயுதக் கடத்தல்காரர் குன்வர் பாலை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
குன்வர் பாலிடமிருந்து 5 கை துப்பாக்கிகள் மற்றும் 500 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை ஒருவரிடம் ஒப்படைப்பதற்காக அவர் வைத்திருந்தார். இதற்கிடையில், போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். தோட்டாக்கள் மற்றும் ஆயுதங்கள் உ.பி.யின் கஜ்ராலாவிலிருந்து கொண்டு வரப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.