இந்தியா

கேரளா லாட்டரி குலுக்கலில் 6 நண்பர்களுக்கு ரூ.12 கோடி பரிசு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடந்த பம்பர் லாட்டரி குலுக்கலில் நகைக்கடை ஊழியர்கள் 6 பேருக்கு ரூ.12 கோடி பரிசு கிடைத்துள்ளது.

கேரளாவில் சமீபத்தில் நடந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல் பரிசு ரூ.12 கோடிக்கு சிறப்பு லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த டிக்கெட்டின் விலை 300 ரூபாய்.

இந்த லாட்டரி சீட்டு குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு பெற்றவர்கள் விவரம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் திருச்சூர் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த நகைக்கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்களான விவேக், ராஜீவன், ராம்ஜின், ரதீஷ், சுபின் தாமஸ், ரோனி ஆகிய 6 நண்பர்களுக்கு முதல் பரிசான ரூ.12 கோடி கிடைத்துள்ளது.

இவர்கள் 6 பேரும் ஓணம் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும்போது தாங்கள் பணிபுரியும் நகைக் கடைக்கு எதிரே இருந்த லாட்டரி விற்பனையாளரிடம் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளனர். அந்த லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

கேரளாவில் இதுவரை நடந்த லாட்டரி பரிசுகளிலேயே இந்த பரிசுத்தொகையான ரூ.12 கோடிதான் அதிகம். வரிக் கழிவு, விற்பனையாளர் கமிஷன் போக பரிசுத் தொகை ரூ.7.56 கோடி 6 பேருக்கும் கிடைக்கும். ‘‘இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே, பணத்தை வைத்து என்ன செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. பிறகு, யோசித்து முடிவு செய்வோம்’’ என்று நண்பர்களில் ஒருவரான ராஜீவன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT