இந்தியா

பொருளாதாரத்தில் துணிச்சலான முடிவெடுக்கும் பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் பாராட்டுகள்: அமித் ஷா ட்வீட்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

பொருளாதாரத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்கும் பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் பாராட்டுகள் என உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்திருக்கிறார்.

மேலும், இத்தகைய பொருளாதார சீர்திருத்தங்கள் வாயிலாக இந்தியாவை மிகப்பெரிய உற்பத்தி மையமாக்குவதே பிரதமர் மோடியின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கார்ப்பரேட் வரிகளை முறைப்படுத்த வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது கார்ப்பரேட் நிறுவனங்கள் சர்வதேச அரங்கில் சிறந்த போட்டியாளராக நிலவ முடியும். நமது இந்தியச் சந்தை முதலீட்டாளர்கள் விரும்பும் தளமாகும்.

மோடி அரசு இந்தியாவை மிகப்பெரிய உற்பத்தி மையமாக்க வேண்டும் என்ற இலக்கில் உள்ளது. இன்றைய அறிவிப்புகளும் இதற்கு முன்னதாக அந்நிய முதலீட்டுக்கான விதிகளை தளர்த்தியமையும் இந்த கனவை மெய்ப்படச் செய்யும்.

துணிச்சலான பொருளாதார சீர்திருத்த முடிவுகளை எடுத்த பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் எனது பாராட்டுகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு செல்லும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், "அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான வரி 30%லிருந்து 22% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு 25% ஆக இருந்த வரி 15% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது" என்று அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தை சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-ஏஎன்ஐ

SCROLL FOR NEXT