புதுடெல்லி
விமானப் படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதவுரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “விமானப் படையின் துணைத் தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதவுரியாவை விமானப் படையின் அடுத்த தளபதியாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
விமானப் படையின் தற்போதைய தளபதி பி.எஸ்.தனோவா வரும் 30-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தளபதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விமானப் படையின் 26-வது தளபதியாக பதவுரியா வரும் 30-ம் தேதி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான இந்திய விலைபேரக் குழுவுக்கு துணைத் தளபதி பதவுரியா தலைமை வகித்தார்.
துணைத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன் பெங்களூவில் உள்ள விமானப் படை பயிற்சிப் பிரிவுக்கு இவர் தலைமை வகித்தார்.