ராஞ்சி
ஜார்கண்ட் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார் இன்று (செப்.19) ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோதயா முன்னிலையில் அஜோய் குமார் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நம்மைப் போன்ற சாமான்ய மக்கள் நேர்மையான அரசியலில் பங்கேற்க வேண்டும். ஆம் ஆத்மி நல்லாட்சி செய்கிறது. இன்றைய அரசியல் சிக்கல்களுக்கு ஆம் ஆத்மியே தீர்வு.
ஆம் ஆத்மி அரசின் சுகாதார, கல்விக் கொள்கைகளையும் நீர் மேலான்மை, மின் பகிர்மானக் கொள்கைகளையும் மக்கள் நன்றாக அறிந்திருக்கின்றனர்.
டெல்லியின் ஏழை மக்களும், நடுத்தர வர்க்க மக்களும் இந்த கொள்கைகளால் பயனடைந்துள்ளனர். இப்போதெல்லாம் டெல்லியில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்குப் பதிலாக அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.
ஜார்க்கண்ட் ஏழை, நடுத்தர மக்களுக்கு இந்த நல் வாய்ப்பு இல்லை.
என்னை கட்சியில் இணைத்த இத்தருணத்தில் மணீஷ், அர்விந்த் கேஜ்ரிவால், சவரவ், துர்கேஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
ஜார்கண்டில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ரகுபர் தாஸ் முதல்வராக இருக்கிறார். அங்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில், அஜோய் குமார் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஜார்கண்ட் விகாஸ் மோர்சா கட்சியிலிருந்து ஜாம்ஷெட்பூர் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வானார். அதன் பின்னர், 2014-ல் காங்கிரஸில் இணைந்தார். 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் காங்கிரஸில் இருந்து விலகினார். தற்போது ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார்.
ஜார்கண்ட் மக்களுக்கு நன்றாக பரிச்சியமான முகமான அஜோய் குமாரின் வரவு ஆம் ஆத்மிக்கு பலமே என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இவர் 1969-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-ஏஎன்ஐ