மத்தியப் பிரதேசத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. 
இந்தியா

கனமழைக்கு 8 ஆயிரம் கிராமங்கள் பாதிப்பு; 24 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம்: ரூ.11,861 கோடி வெள்ள நிவாரணம் கோருகிறது ம.பி.அரசு

செய்திப்பிரிவு

போபால்

கடும் மழை காரணமாக 24 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்துள்ள நிலையில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.11,861 கோடி நிதியைக் கோரியுள்ளது மத்தியப் பிரதேச அரசு.

கடந்த மூன்று மாதங்களாக மத்தியப் பிரதேசத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் மொத்தம் உள்ள 52 மாவட்டங்களில் 36 மாவட்டங்களில் 8,000 கிராமங்கள் அதிக மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 220 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 50,000 பேர் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர்.

போபாலில் இந்த தென்மேற்குப் பருவமழையின் போது, 1980க்குப் பிறகு 168.89 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி ஜி.டி.மிஸ்ரா தெரிவித்தார்.

இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநிலத்தின் சட்ட அமைச்சர் பி.சி.சர்மா கூறியதாவது:இடைவிடாத கனமழை காரணமாக மாநிலத்தில் 24 லட்சம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம், ரூ.9,600 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.325 கோடி நீட்டிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் சாலைகள் சேதமடைந்துள்ளன.

செப்டம்பர் 16-ம் தேதி சம்பல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு மொரெனா தொகுதி மற்றும் ஷியோபூர் மாவட்டத்தைப் பாதித்தது குறித்து தனது கவனத்தைச் செலுத்துமாறு முதல்வர் கமல்நாத்துக்கு தோமர் கடிதம் எழுதியிருந்தார்.

சில மணிநேரத்தில் அதிகப்படியான மழை காரணமாக, காந்தி சாகர் அணையில் நீர்வரத்து 3.5 லட்சம் கனஅடியிலிருந்து 16 லட்சம் கனஅடியாக உயர்ந்தது. இதனால் சம்பல் ஆற்றின் உப்பங்கழிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நாசமாயின.

சர்தார் சரோவர் அணையில் பிரதமர் தனது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ​​ஆயிரக்கணக்கானோர் இங்கு நீரில் மூழ்கிக்கொண்டிருந்தனர். எங்கள் கோரிக்கை மறுக்கப்பட்டால் நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும்''.

இவ்வாறு மத்தியப் பிரதேச மாநில சட்ட அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT