கைப்பற்றப்பட்ட 5 யானைகளின் 10 தந்தங்களுடன் கைது செய்யப்பட்ட யானை வேட்டைக்காரர்கள் | படம்: ஏஎன்ஐ 
இந்தியா

கேரளா, கர்நாடகாவில் யானை வேட்டை: மைசூர் அருகே 3 பேர் கைது

செய்திப்பிரிவு

மங்களூரு

கர்நாடகா மாநிலத்தில் தந்தங்களுக்காக யானைகளைத் தொடர்ந்து வேட்டையாடி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத யானைத் தந்த வர்த்தகத்தில் இவர்களுக்குப் பின்னால் மிகப்பெரிய கும்பலே இயங்குவதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து காவல்துறை கூறியதாவது:

''யானைகளை வேட்டையாடி அதன் தந்தங்களைக் கடத்தும் தொழிலில் மாநிலங்களுக்கு இடையே மிகப்பெரிய கும்பல் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல்கள் கிடைத்த பிறகு புத்தூர் வனக் கோட்டப் பகுதிகளில் போலீஸாரின் தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது பெல்தங்கடி தாலுகாவில் சூர்யா சாலை என்ற இடத்தில் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்களின் வீட்டிலிருந்து 10 தந்தங்கள் அதாவது 5 யானைகளின் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக, ஆபிரகாம், அன்வர் மற்றும் சுரேஷ் ஆகிய மூன்று பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பக் கட்ட விசாரணையில் மைசூர் கோட்டத்தில் அமைந்துள்ள அடர்ந்த புதுவேட்டு வனப் பகுதியில் யானைகளை சுட்டுக்கொன்றதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். சுட்டுக்கொல்லப்படும் யானைகளிலருந்து தந்தங்களை அகற்றி அதைக் கடத்தும் பணிகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும் இவர்களுக்குப் பின்னால் தந்தக் கடத்தலில் மிகப்பெரிய கும்பல் மாநிலங்களுக்கிடையே உடந்தையாக செயல்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்தும் யானைத் தந்தங்களைக் கடத்திவந்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த மூன்று பேர்களுடன் இணைந்த இன்னொரு நபர் சமீபத்தில் வெளிநாடு சென்று அங்கிருந்து சட்டவிரோத தந்த விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

இம்மூவர் மீதும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை மேலும் தொடர்கிறது. இவர்களுக்குப் பின்னால் உள்ள ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும்''.

இவ்வாறு கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT