புதுடெல்லி
ரயில் பயணத்திற்கான காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு எம்.பி.க்களின் போலி சிபாரிசுக் கடிதங்கள் அளிப்பது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க விஐபி எனும் அதிமுக்கியப் பிரமுகர்களுக்கான ஒதுக்கீட்டின் விதிமுறைகளை மத்திய ரயில்வே அமைச்சகம் மாற்றி அமைக்கிறது.
நாடு முழுவதிலும் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்களின் இருக்கை அல்லது படுக்கை வசதிக்கான அவசர இட ஒதுக்கீட்டில் விஐபிக்களுக்காக ஐந்து சதவிகிதம் உள்ளது. இதில், மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற எம்.பி.க்கள் மற்றும் சட்டப்பேரவை எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு சிபாரிசுக் கடிதங்கள் மூலம் அவசர இடவசதி கடைசி நேரத்தில் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் தம் பெயர் பதித்த தாள்களில் பயணிகள் விவரத்துடன் சிபாரிசுக் கடிதங்கள் அளிப்பதும் வழக்கம்.
இதில், எம்.பி.க்களின் பெயரில் வரும் கடிதங்கள் பலவும் போலியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த எம்.பி.க்களின் அனுமதி இல்லாமல் அவர்களது அலுவலர்கள் தம் கையெப்பம் இட்டும், சிலமுறை கையொப்பமே இல்லாமலும் வருவது அதிகமாகி வருகிறது.
இக்கடிதங்கள் தரகர்கள் மூலமாக விற்பனைக்கும் வந்து விடுகிறது. இதனால், மத்திய ரயில்வே அமைச்சகம் இதற்காக புதிய விதிமுறைகளை வகுத்து வருகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ இணையதளத்திடம் ரயில்வே அமைச்சக வட்டாரம் கூறும்போது, ''தரகர் மூலமாக கடந்த மாதம் இட ஒதுக்கீடு பெற்ற ஒரு பயணி, டெல்லியில் இருந்து பிஹார் செல்லும் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் தம் படுக்கை வசதி பெற்ற ரகசியத்தை சக பயணிகளிடம் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இதை ஒருவர் தம் கைப்பேசியில் பதிவு செய்து ரயில்வே அமைச்சக ட்விட்டரில் பதிவேற்றம் செய்திருந்தார்.
இதன் மீதான நடவடிக்கைக்கு அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட அதை, சிபிஐ விசாரித்து உறுதி செய்தது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அவசர இட ஒதுக்கீட்டில் புதிய விதிமுறை அமலாக்கவும் முடிவானது'' எனத் தெரிவித்தனர்.
அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிமுறைப்படி, நாடாளுமன்ற எம்.பி.க்கள் இனி பயணிகளின் கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் அச்சு முத்திரையில் கையொப்பம் இட்டு சிபாரிசு செய்ய வேண்டும். இக்கடிதத்தை தம் பெயர் மற்றும் அடையாள எண், விலாசம், தொலைபேசி எண்கள் அச்சான அதிகாரபூர்வத் தாளில் எழுத வேண்டும். இதில் ஒதுக்கப்படும் இருக்கைகளை பயணத்தின் இடையிலும் ரயில் அதிகாரிகள் சோதனை செய்து உறுதி செய்யும் வாய்ப்புகள் உள்ளன.
இதில், தவறான பயணிகள் பற்றிய தகவல் அளிக்கப்பட்டால் அவர்களின் முன்பதிவு ரத்து செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதேமுறை, எம்.எல்.ஏக்களுக்கும் அறிமுகமாக உள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் சிபாரிசு செய்யும் பயணிகளுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பயணிகளுக்கான சிபாரிசில் பத்திரிகை ஆசிரியர்கள் கையொப்பம் இடவேண்டி இருக்கும்படியும் மாற்றம் செய்யப்பட உள்ளது.
ஆர்.ஷபிமுன்னா