படம் உதவி | ட்விட்டர் 
இந்தியா

 ‘சொன்னா புரிஞ்சுக்குங்க சார்; என் தலை சைஸுக்கு ஹெல்மெட்டே கிடையாது’: போலீஸை அதிரவைத்த வாகன ஓட்டி

செய்திப்பிரிவு

அஹமதாபாத்

ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டிய இளைஞரை போலீஸார் மடக்கினர். அந்த வாகன ஓட்டி சொன்ன பதிலால் அபராதம் விதிக்காமல் போலீஸார் அவரை அனுப்பி வைத்தனர். என் தலை சைஸுக்கு இந்தியாவிலேயே ஹெல்மெட் இல்லை என்பதே அவர் சொன்ன பதில்.

குஜராத் மாநிலம் சோட்டா உதய்பூர் மாவட்டம் பொடேலி நகரைச் சேர்ந்தவர் ஜாகீர் மோமான். இவர் சொந்தமாக பழக்கடை வைத்துள்ளார். மோட்டார் சைக்கிளில்தான் சென்று வருவார். குஜராத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பிறகு போலீஸார் ஹெல்மெட் அணியாதவர்களைப் பிடித்து அபராதம் விதிக்கின்றனர்.

நேற்று முன்தினம் ஜாகீர் மோமானும் மோட்டார் சைக்கிளில் வரும்போது ஹெல்மெட் அணியாமல் வந்ததால் போக்குவரத்து போலீஸ் எஸ்.எஸ்.ஐ வசந்த் ரத்வா அவரை மடக்கியுள்ளார். ஹெல்மெட் அணியாததற்காக அபராதத் தொகையைக் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதற்கு ஜாகீர் மோமான், ''அபராதம் கட்ட முடியாது. அனைத்து ஆவணங்களையும் காட்டுகிறேன். நல்ல குடிமகன் நான். சட்டத்தை மதிக்கிறேன். ஆனால், அபராதம் கட்ட முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

''ஹெல்மெட் அணியாமல் வந்துவிட்டு அபராதம் கட்ட முடியாது என்கிறாயா?'' என போலீஸார் கேட்டனர். ''ஹெல்மெட் போட முடியாது சார்'' என்று ஜாகீர் மீண்டும் உறுதியாகக் கூறியுள்ளார். ''அபராதம் கட்டமாட்டாய், ஹெல்மெட்டும் போடமுடியாதா?'' என போலீஸார் கோபமாகக் கேட்டனர். ''அந்த முடியாது இல்ல சார்...தலைக்குள் ஹெல்மெட் போகாது சார்'' என்று ஜாகீர் மோமான் பரிதாபமாகக் கூற, ''என்ன சொல்கிறாய்?'' என்று போலீஸார் கேட்டுள்ளனர்.

''என் தலை சைஸுக்கு இந்தியாவில் ஹெல்மெட்டே கிடையாது சார்'' என்று கூறி, அங்குள்ளவர்கள் ஹெல்மெட்டை எல்லாம் கேட்டு தலையில் போட்டுக் காண்பிக்க பாதி தலைக்குமேல் அது இறங்கவில்லை. ''அவ்வளவு பெரிய தலையா'' என போலீஸார் மலைத்துப் போய் நின்று விட்டனர்.

''அதை ஏன் சார் கேட்கிறீர்கள்? நான் ஏறாத கடையில்லை, போடாத ஹெல்மெட் இல்லை, எந்த ஹெல்மெட்டும் என் தலைக்குப் போதவில்லை. இதுவரை பல இடங்களில் இதற்காக அபராதம் கட்டிவிட்டேன்'' என்று ஜாகீர் புலம்பியுள்ளார்.

''நல்ல மனிதனாக இருக்கிறாய், சட்டத்தை மதிக்கிறாய், அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கு ஹெல்மெட் உன் தலைக்குப் போதவில்லை என்றால் நீ என்ன செய்வாய்? போய் வா. உனக்கு அபராதம் இல்லை'' என்று போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ வசந்த் ராத்வி அனுப்பியுள்ளார்.

இதை மஜித் ஆலம் என்பவர் ட்விட்டரில் பதிவிட, இந்தியா முழுவதும் ஜாகீர் மோமான் பிரபலமாகிவிட்டார். இனி அவருக்கு மட்டும் ஹெல்மெட் சட்டம் இல்லை.

SCROLL FOR NEXT