ராஞ்சி,
மோடி ஆட்சியின் கீழ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மீட்கப்படும் என ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
ஜார்க்கண்டில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் ரகுபர் தாஸ், "விடுதலை வீரர்கள் பிர்ஸா முண்டா, சித்து காணுவா உள்ளிட்டோரின் கனவு சட்டப்பிரிவு 370 ரத்தால் நனவாகியுள்ளது. இதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஜார்க்கண்ட் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரும் நிச்சயம் மீட்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
பாக்., ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியே. அதை நிச்சயம் ஒருநாள் மீட்போம் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கூறியிருந்த நிலையில் ஜார்க்கண்ட் முதல்வரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-ஏஎன்ஐ