புதுடெல்லி
பிரதமர் மோடியைச் சந்திக்கச் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புகழ்பெற்ற கொல்கத்தா இனிப்பு வகைகளை வாங்கி அவரின் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்கச் சென்றுள்ள காரணம் என்ன என்று தெரியாமல் அரசியல் வட்டாரங்கள் பல்வேறு யூகங்களை எண்ணி வரும் நிலையில் மம்தா அவருக்கு இனிப்புகளை அனுப்பி வைத்துள்ளார்.
இதுஒருபுறம் இருக்க, சாராத சிட்பண்ட் வழக்கில் தொடர்புடையவருமான முன்னாள் கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜாராமல் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரைக் கண்டுபிடிக்க சிபிஐ சிறப்புப் பிரிவை உருவாக்கி தேடி வருகிறது. இந்த சூழலில் பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்திக்கச் சென்றதுதான் எதிர்க்கட்சிகளின் வாய்க்கு அவல் கொடுத்தது போன்றதாகி இருக்கிறது.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிதி கோரிச் செல்கிறேன், பிரதமரை முதல்வர் சந்திப்பது அரசியலமைப்புக் கடமை என்றெல்லாம் முதல்வர் மம்தா பானர்ஜி தனது சந்திப்புக்கு விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இந்த விளக்கத்தை பாஜகவும், காங்கிரஸும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
பிரதமர் மோடியை இன்று மாலை முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேச உள்ளார். அதற்கு முன்னதாக, டெல்லியில் உள்ள 7, லோக் கல்யான் மார்க் பகுதியில் இருக்கும் பிரதமர் மோடியின் வீட்டுக்கு கொல்கத்தா வகை ஸ்பெஷல் இனிப்புகளை வாங்கி முதல்வர் மம்தா அனுப்பியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மம்தா பானர்ஜி பிரதமர் மோடியைச் சந்திக்கச் சென்று இருப்பது குறித்து மேற்கு வங்க காங்கிரஸ் மாநிலத் தலைவர் சோமன் மித்ரா கூறுகையில், "பிரதமர் மோடி பிறந்த நாள் கொண்டாடும் நாளில் டெல்லிக்குச் சென்ற மம்தா பானர்ஜி, அவருக்கு வாழ்த்து கூறி பரிசளித்து, சாரதா சிட்பண்ட் வழக்கில் சிக்கியுள்ள போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாரை தப்பிக்க வைக்க கோரிக்கை விடுப்பார்" எனத் தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், "தனக்கு நெருக்கமாக இருக்கும் சாரதா சிட்பண்ட் மோசடியில் சிக்கி இருக்கும் போலீஸ் அதிகாரியைக் காப்பாற்ற மம்தா முயல்கிறார். மக்களவைத் தேர்தலில் கடுமையாக பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி, ஏன் பிரதமர் மோடியை உடனடியாகச் சந்திக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐஏஎன்எஸ்