பஞ்சாப்பில் சாலையில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் கடத்த முயன்ற நபர் உள்ளூர் வாசிகளிடம் பிடிபட்டார். மேலும் இந்தக் கடத்தல் முயற்சி அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “பஞ்சாப்பின் லூதியானாவில் உள்ள ரிஷி நகரில் தங்கள் வீட்டுக்கு முன் குழந்தைகளுடன் மெத்தை ஒன்றில் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்தனர்.
இதனைக் கவனித்த ஒரு நபர் சைக்கிள் ரிக்ஷா ஒன்றை மெதுவாகத் தள்ளிக்கொண்டு அந்தச் சாலை வழியாக வந்தார். பின்னர் அவர்கள் பக்கத்தில் சைக்கிள் ரிக்ஷாவை நிறுத்தினார். பெற்றோர்கள் தூங்குகிறார்கள் என்பதை உறுதி செய்த அந்த நபர் குழந்தையைப் பெற்றோர்களிடமிருந்து மெதுவாகத் தூக்கினார். அப்போது அந்தக் குழந்தையின் தாய் சுதாரித்துக்கொண்டு எழுந்து அந்த நபரிமிருந்து குழந்தையை மீட்டார். மாட்டிக் கொண்ட நபர் சைக்கிள் ரிக்ஷாவை வேகமாக இயக்கி தப்பிக்க முயன்றார்.
உள்ளூர்வாசிகள் அந்த நபரை ஓடிச் சென்று பிடித்தனர். இதனைத் தொடர்ந்து பிடிபட்ட நபர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக் கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.