பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

நாடு முழுவதும் 199 புதிய சிறைகள்; ரூ.1,800 கோடியில் அமைக்க மத்திய அரசு திட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

நாடு முழுவதும் 199 புதிய சிறைகளை ரூ.1800 கோடியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 199 சிறைகள் உருவாக்கத்தின் முக்கிய நோக்கமே, சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாகி, சிறைக்குள் கிரிமினல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அதைத் தடுக்கும் நடவடிக்கையாக புதிய சிறைகள் கட்டப்பட உள்ளன.

மேலும், சிறைகளை மறுசீரமைப்பு மையமாகவும், பாதுகாப்பு மற்றும் காவலை உறுதி செய்யும் விதமாகவும் மாற்றப்படும் என்று சமீபத்தில் உள்துறை இணையைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்திருந்தார்

கடந்த 12 மற்றும் 13-ம் தேதி சிறைக்குள் நடக்கும் கிரிமினல் நடவடிக்கைகள் குறித்து போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாடு சார்பில் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டில் போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாடு இயக்குநர் விஎஸ்கே கவுமுதி, திஹார் சிறையின் டிஜிபி சந்தீப் கோயல்உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.

அப்போது சிறைகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடு, வசதிக் குறைகள், ஊழியர்கள் பற்றாக்குறை, பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து பேசப்பட்டன.

இந்த மாநாட்டில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து விஎஸ்கே கவுமுதி கூறுகையில், "நாடு முழுவதும் 199 புதிய சிறைகளை ரூ.1800 கோடியில் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய சிறையில் 1500க்கும் மேலான கைதிகள் அடைக்கப்படும் வகையில் இருக்கும். சிறையில் நடக்கும் கைதிகளுக்கு இடையிலான கிரிமினல் நடவடிக்கைகளை எவ்வாறு தடுப்பது, அதை எதிர்கொள்வது குறித்து மாநாட்டில் பேசப்பட்டது.

மிகப்பெரிய ரவுடிகள் தங்கள் திட்டங்களைச் சிறைக்குள் உருவாக்குகிறார்கள் என்பது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. சிலநேரங்களில் கைதிகளின் தாக்குதலில் இருந்து சிறை ஊழியர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் பேசப்பட்டது" எனத் தெரிவித்தார்

ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT