டேராடூன்
தொலைதூர இமயமலை கிராமத்தில் விவசாயியின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட மோதி பாக் என்ற ஆவணப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்தார்.
உத்தரகண்ட் மாநிலத்திலிருந்து நிறைய பேர் வேலை தேடி கிராமங்களைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாகி வருகின்றன. ஆனால் வித்யாதுத் எனும் பெரியவர் அவ்வாறு செய்யவில்லை. மற்றவர்களைப் போல் இல்லாமல் அவர் தொடர்ந்து தனது நிலத்தில் விவசாயம் செய்துகொண்டுவருகிறார்.
அதுமட்டுமின்றி தனது கிராமத்தின் அடிப்படை தேவைகளுக்காக அவ்வப்போது போராட்டங்களும் நடத்துகிறார்.
சிறுத்தைகள் வந்து கால்நடைகளை இழுத்துச் சென்றுவிடுகின்றன. ஒருநாள் தனது வீட்டிற்குள்ளும் சிறுத்தை வரும் என்று அவருக்கும் தெரியும் என்றாலும் மலையின் அத்தனை பகுதிகளிலும் எந்த அச்சமின்றி அவர் சுற்றித் திரிகிறார்.
இதுகுறித்து உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியதாவது:
''ஒரு அரசுப் பணியில் வேலைக்கு சேர்ந்தும்கூட அதை விட்டுட்டு கடந்த 50 ஆண்டுகளாக மலையில் விவசாயம் செய்து வருகிறார் வித்யாதுத் என்ற பெரியவர். தனது கடின உழைப்பை செலுத்தி 84 வயதிலும் ஒரு மலைக்கிராமத்தில் தனியாக விவசாயம் செய்து வருபவரைப் பற்றிய ஆவணப் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
பாரி கர்வால் பிராந்தியத்தில் வசிக்கும் இந்த மூத்த விவசாயியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் 'மோடி பக்' என்ற சிறந்த ஆவணப்படத்தை இயக்கிய நிர்மல் சந்தர் டான்ட்ரியலை வாழ்த்துகிறேன்.
இந்த படம், இளைஞர்கள் கிராமங்களை விட்டு வெளியேறாமல் தங்கள் கிராமங்களை நேசிக்க வைக்கும். அவர்களின் சமூகத்திற்குப் பணியாற்றவும் இப்படம் ஊக்குவிக்கும். இது தொலைதூர பகுதிகளில் இருந்து இடம்பெயர்தலைத் தடுத்து நிறுத்தவும் உதவும்.
இடம்பெயர்வுகளைத் தடுப்பதில் இளம் விவசாயிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். மாநில அரசு தொடங்கியுள்ள திட்டங்களையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்''
இவ்வாறு உத்தரகண்ட் முதல்வர் தெரிவித்தார்.