இந்தியா

5 ட்ரில்லியன் பொருளாதாரம் பற்றிய வெற்றுப் பேச்சுக்களால் பலனில்லை: பிரியங்கா காந்தி சாடல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

5 ட்ரில்லியன் பொருளாதாரம் பற்றிய வெற்றுப் பேச்சுக்களால் எந்த பலனும் இல்லை என்று மத்திய அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

இது தொடர்பாக பிரியங்கா இன்று (புதன்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில், "5 ட்ரில்லியன் பொருளாதாரம் பற்றிய வெற்றுப் பேச்சுக்களாலும், தலைப்புச் செய்திகளுக்கான கருத்தை சொல்வதாலும் இந்தியப் பொருளாதாரம் மீண்டுவிடாது. அதேபோல் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பதால் மூலதனங்களை ஈர்ப்பதும் நடக்காது.

முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்திருக்கிறது. இந்தியப் பொருளாதார மந்தநிலை அவர்கள் நம்பிக்கையை சிதைத்திருக்கிரது.

பாஜக அரசு இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. தற்போதைய பொருளாதார மந்தநிலை வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த இந்தியாவுக்கு ஒரு வேகத்தடை போல் ஆகிவிட்டது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியப் பொருளாதார பின்னடைவு காரணமாக சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை இந்தியாவில் இருந்து திரும்பப் பெறுவதாக வெளியான செய்தியினை சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி இவ்வாறு ட்வீட் செய்திருக்கிறார். அவர் தனது ட்வீட்களை இந்தியில் பதிவிட்டிருக்கிறார்.

பிரியங்கா காந்தி தொடர்ந்து பொருளாதார தேக்கநிலை குறித்து பேசியும் ட்வீட் செய்தும் வருகிறார்.

தொடர்ந்து சூளுரைக்கும் அமித்ஷா..

"வரும் 2024-ம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்த, மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். ஆகையால், நாட்டின் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது" என்று அமித் ஷா தொடர்ந்து அனைத்து மேடைகளிலும் பேசி வருகிறார்.

நேற்றும் இதனை முன்வைத்து அவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஏஎன்ஐ

SCROLL FOR NEXT