நாட்டில் 275 பேருக்கு மத்திய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் பரதிபாய் சவுத்ரி நேற்று மக்களவையில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நாட்டில் தற்சமயம் 275 பேருக்கு மத்திய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கால இடைவெளியிலும், இந்தப் பாதுகாப்பை மேம்படுத்தவோ அல்லது குறைக்கவோ அல்லது திரும்பப் பெறவோ ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த 275 பேரில் 31 பேருக்கு 'இசட் ப்ளஸ்' பிரிவு பாதுகாப்பும், 77 பேருக்கு 'இசட்' பாதுகாப்பும், 136 பேருக்கு 'ஒய்' பாதுகாப்பும் மற்றும் 31 பேருக்கு 'எக்ஸ்' பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. இவற்றுக்கான மொத்த செலவை கூறுவது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய மக்கள் தொகை பதிவுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட உள்ளதாக நேற்று மாநிலங்களவையில் பரதிபாய் சவுத்ரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தேசிய மக்கள் தொகை பதிவுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட உள்ளன. இந்தப் புதிய தகவல்களை அடிப்படை யாகக் கொண்டு இனி அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தப் பணிக்கு ரூ.951.35 கோடி செலவாகும். இது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.
சத்தீஸ்கரில் வன்முறை அதிகம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு அதிகளவில் நக்ஸல் வன்முறை ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் இங்கு பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் பரதிபாய் சவுத்ரி கூறியுள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் நேற்று அவர் தெரிவித்ததாவது: சத்தீஸ்கரில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 256 நக்ஸல் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் இங்கு இதுவரை 58 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ஜார்க்கண்டில் 177 வன்முறைச் சம்பவங்களும், 32 பேர் அதற்குப் பலியாகியும் உள்ளனர்.
ஒடிசாவில் 41 சம்பவங்களில் 8 பேரும், மகாராஷ்டிராவில் 27 சம்பவங்களில் 8 பேரும் பலியாகி உள்ளனர். மொத்தமாக, நக்ஸல் பாதிப்பு உள்ள பத்து மாநிலங்களில் 583 வன்முறை சம்பவங்களில் 118 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1980ம் ஆண்டிலிருந்து இன்று வரை நக்ஸல் வன்முறைகளுக்கு 12,331 பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
'சார்க்' செயற்கைக்கோள்
'சார்க்' நாடுகளின் செயற்கைக் கோள்களைக் கட்டமைப்பதற்கும் மற்றும் ஏவுவதற்கும் ஆகும் செலவு களை இந்தியா ஏற்றுக்கொள்ளும். ஆனால் அவற்றை இயக்கத் தேவைப்படும் ஆய்வக செலவுகளை அந்தந்த நாடுகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்களவையில் மத்திய விண் வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 6 நாடுகளின் 28 செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் ஏவும். இஸ்ரோவின் ஒரு பகுதியான 'ஆன்ட்ரிக்ஸ்' இதற்கான ஒப்பந்தங்களை அல்ஜீரியா, கனடா, ஜெர்மனி, இந்தோனேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை 19 நாடுகளின் 45 செயற்கைக்கோள்களை இந்தியா ஏவியுள்ளது. இதன் மூலம் 78.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.471 கோடி) வருமானம் கிடைத்துள்ளது.