இந்தியா

ராம்நாத் சென்ற விமானத்தில் கோளாறு முழு விசாரணைக்கு ஏர் இந்தியா உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐரோப்பாவில் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லாவேனியா ஆகிய 3 நாடுகளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் சுவிட்சர்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்லாவேனியா செல்லவிருந்தார்.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் விமான நிலையத்துக்கு அவர் சென்ற பிறகு, அவரது பயணத்துக்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராம்நாத் கோவிந்த் ஹோட்டலுக்கு திரும்பச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். இதைத்தொடர்ந்து கோளாறு சரிசெய்யப்பட்டு அவர் 3 மணி நேரம் தாமதமாக ஸ்லாவேனியா சென்றடைந்தார்.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து முழுமையான விசாரணைக்கு ஏர் இந்தியா உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து செல்ல பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்த அந்நாடு அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக இந்தியாவின் கோரிக்கையை அந்நாடு நிராகரித்துவிட்டது.

SCROLL FOR NEXT