புதுடெல்லி
பிரதமர் நரேந்திர மோடி தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதையொட்டி குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர்கள் பலர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்
பிரதமர் மோடிக்கு இன்று 69-வது பிறந்தநாள். தனது பிறந்தநாளான இன்று குஜராத்தில்தான் இன்றுமுழுமையாக பிரதமர் மோடி செலவிடுகிறார்.
நர்மதா மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்று பிரதமர் மோடி பார்வையிடுகிறார். சர்தார் சரோவர் அணை தனது முழுக் கொள்ளவை எட்டியுள்ளதால் அதையொட்டி நடைபெறும் பூஜைகளிலும் நமாமி நர்மதே பண்டிகையிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
கேவாதியா பகுதியில் உள்ள ஈகோ சுற்றுலாப் பகுதியை பார்வையிட்ட பிரதமர் மோடி : படம் ஏஎன்ஐ
இதற்காக நேற்று இரவு அகமதாபாத் வந்த பிரதமர் மோடி அங்கு தங்கி இன்று காலை தனது தாயாரைச் சந்தித்து அசி பெற்று அங்கிருந்து நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ள அணைப்பகுதிக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
அதன்பின் அணைப் பகுதி அமைந்துள்ள கேவாதியா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்தக்கூட்டம் முடிந்ததும், அணை மற்றும் சர்தார் படேல் சிலையைச் சுற்றி நடந்துவரும் மேம்பாட்டுப்பணிகளைப் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
மேலும் கேவாதியாவின் குருதேஸ்வர் கிராமத்தில் உள்ள தத்தாத்ரேயா கோயிலுக்குச் சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்துகிறார்.
பிரதமர் மோடி தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி அவருக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு விடுத்த பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், " பிரதமர் மோடியின் தலைமையில் நாடு நிலையான வளர்ச்சி அடைந்து வருகிறது. அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்
பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா விடுத்த வாழ்ததுச் செய்தியில் " கடின உழைப்பு, தீர்க்கமான தலைமைப் பண்பு, வலிமையான மனோதிடம் கொண்ட தலைவர். உங்களின் தலைமையில் வளர்ந்து வரும் இந்தியா வலிமையாக, பாதுகாப்பாக, நம்பிக்கையான தேசமாக உலகில் தடம் பதிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் கூறுகையில் " உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவை வலிமையாக கட்டமைத்து, மரியாதைக்குரிய நாடாக பிரதமர் மாற்றி இருக்கிறார். அவரின் தொலைநோக்கு தலைமை தேசத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும். கடவுள் அவருக்கு நல்ல உடல்நலத்தையும், ஆயுளையும் அளிக்க பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்தார்
மம்தா பானர்ஜி வாழ்த்து
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் விடுத்த வாழ்த்துச் செய்தியில், " பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்
பிடிஐ