இந்தியா

புதிய மோட்டார் வாகனச் சட்டம்: பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்ட 'விஜாஸ்' விதர்பா விவசாய அமைப்பு 

செய்திப்பிரிவு

நாக்பூர்,

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் (எம்.வி.ஏ) கீழ் கடுமையான தண்டனைகள் தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள 'விஜாஸ்' அமைப்பு பாஜகவுடனான தோழமை வட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன்படி பல்வேறு இடங்களில் சாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. சாலைப் பாதுகாப்பு எனினும் அபராதம் பலமடங்கு என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில் வாகன ஓட்டிகள் உள்ளனர்.

நாட்டின் பாதி மாநிலங்கள் இந்த புதிய சட்டத்தை நிராகரித்துள்ளன. அல்லது அபராதத்தை குறைத்துவருகின்றன.

கிஷோர் திவாரி

ஒரு முன்னாள் சமூக ஆர்வலர் கிஷோர் திவாரி, இவரது தலைமையில்தான் விதர்பா விவசாயிகளுக்கான அமைப்பு 'விதர்பா ஜான் அந்தோலன் சமிதி' என்ற பெயரில் உள்ளது. விஜாஸ் என சுருக்கமான அழைக்கப்படும் இந்த அமைப்பு பாஜகவில் இணை உறுப்பினர் என்ற அந்தஸ்தோடு கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவின் தோழமை வட்டத்தில் உள்ள ஒரு அமைப்பாகும்.

ஆனால் இந்த அமைப்பின் தலைவர் கிஷோர் திவாரி, புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் (எம்.வி.ஏ) கீழ் கடுமையான தண்டனைகள் தொடர்பாக கடந்த வாரம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியுடன் விவாதத்தில் ஈடுபட்டார்.

கடுமையான போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் பற்றி குறிப்பிட்ட திவாரி, "வாகன ஓட்டிகளுக்கு பலமடங்கு அபராதம் என்பது ஏற்கமுடியாதது. இது மக்கள் விரோதமானவை ஆகும். நாட்டில் தற்கொலைகளைத் தூண்டக்கூடும்" என்று கட்காரியை அவர் எச்சரித்தார். அதைத் தொடர்ந்து விஜாஸ் அமைப்பு, இன்று பாஜகவுடனான தனது உறவுகளை முறித்துக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து விஜாஸ் அமைப்பின் தலைவர் திவாரி ஐஏஎன்எஸ்ஸிடம் கூறியதாவது:

''வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் நாங்கள் பாஜகவுடன் இணைந்திருந்தோம். ஆனால் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. இதனால் நாங்கள் பாஜகவுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டோம்,

மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக எப்போதும்போல் எனது நடவடிக்கைகளை திரும்பவும் தொடங்குவேன்.

தேவைப்பட்டால், மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அவல நிலையைத் தீர்ப்பதற்கு நாங்கள் சிவசேனாவுடன் ஒத்துழைப்போம்''

இவ்வாறு கிஷோர் திவாரி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT