புதுடெல்லி
தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது, அரசியலமைப்புச் சட்டத்தில் 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. கடந்த மாதம் 5-ம் தேதியில் இருந்து மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன
இந்நிலையில் காஷ்மீர் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர் அனிருத்தா பாஸின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும், சுதந்திரமாக கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகினார். அவர் வாதிடுகையில், " காஷ்மீரில் இதுவரை ஒரு துப்பாக்கி குண்டுகூட சுடப்படவில்லை, சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. உள்ளூரில் மட்டும் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. காஷ்மீர் பகுதியில் 88 சதவீதம் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்டன.
காஷ்மீரில் அனைத்து நாளேடுகளும் வழக்கும் போல் இயங்குகின்றன, நாளேடுகள் வெளிவருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்குகிறது. தூர்தர்ஷன் உள்பட மற்ற சேனல்களும், வானொலி, பண்பலைகளும் வழங்கம் போல் இயங்குகின்றன. எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை " எனத் தெரிவித்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு, " தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு காஷ்மீரில் இயல்புநிலையை அரசு கொண்டுவர வேண்டும். மக்கள் அடிப்படை வசதிகளைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். காஷ்மீரில் இயல்புநிலை வருவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.
ஸ்ரீநகர் செல்வோம்
இதனிடையே, இரு குழந்தைகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில் காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத்தை அணுக முடியாத சூழல் இருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வில் தனியாக விசாரிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், " மக்கள் நீதிமன்றத்தை அணுக முடியாவிட்டால் அது தீவிரமான விஷயம். ஸ்ரீநகருக்கு தேவைப்பட்டால் நானே நேரில் செல்வேன். இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை அளிக்க வேண்டும். ஒருவேளை காஷ்மீர் மாநில தலைமை நீதிபதி அளிக்கும் அறிக்கையில், இருந்து இங்கு கூறப்பட்ட தகவல் தவற என தெரியவந்தால் மனுவைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" எனத் தெரிவித்தார்
குலாம்நபி ஆசாத்துக்கு அனுமதி
காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான குலாம் நபி ஆசாத் தனது குடும்பத்தினரைச் சந்திக்க காஷ்மீர் செல்ல அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, " குலாம் நபி ஆசாத், ஸ்ரீநகர், ஜம்மு, பாரமுல்லா, அனந்த்காக் ஆகிய பகுதிகளில் சென்று உறவினர்களையும் மக்களைச் சந்திக்கலாம். ஆனால் பொதுக்கூட்டங்கள் ஏதும் நடத்தக்கூடாது" எனத் தெரிவித்தனர்
தாரிகாமிக்கு அனுமதி
ஜம்மு காஷ்மீர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகாமி உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரை மீண்டும் காஷ்மீருக்கு செல்ல அனுமதிகோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்ககல் செய்திருந்தார். அவரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவமனை அனுமதித்தால் தாரிகாமி வீட்டுக்குச் செல்வதில் எந்தவிதமான அனுமதியும் பெறத் தேவையில்லை. காஷ்மீருக்கு செல்லலாம் எனத் தெரிவித்தது
பிடிஐ