திரிவேணி சங்கமம் அருகே உள்ள ஆற்றங்கரையோரப் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளை மூழ்கடித்துள்ள வெள்ளநீர். 
இந்தியா

கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ள அபாயம்

செய்திப்பிரிவு

பிரயாக்ராஜ்,

உத்தரப் பிரதேசத்தில் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்வதால் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்திற்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இடைவிடாத மழையால் கங்கை ஆற்றின் கரையோர கிராமங்கள் ஓரளவு நீரில் மூழ்கியுள்ள நிலையில் மாவட்டத்தில் வெள்ள அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பிரயாக்ராஜ் நகரில் அதிக கனமழை பெய்துவருவதால் கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கு வழியே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் முழங்கால் அளவு நீரில் செல்ல வேண்டிய கட்டாயத்திலும் இன்னும் பல இடங்களில் அதிக அளவு நீரைக் கடக்க முடியாமலும் தவித்து வருகின்றனர். இங்குள்ள சுமார் 500 வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன, நேற்று முதல் இங்கு மின்சாரம் இல்லை.

இதனை அடுத்து அங்கு நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதல்கட்டமாக கங்கநகர் கிராமத்திற்கு அருகில் உள்ள நிவாரண முகாம்களில் ஆற்றங்கரையோர கிராம மக்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கங்காநகரில் வசிக்கும் ராம் ஷங்கர் என்பவர் கூறுகையில், ''மக்களை மீட்பதற்கும் பொருள்களை மாற்றுவதற்கும் விரைவில் இங்கு படகு சேவைகளை எங்களுக்கு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்'' என்றார்.

இதே பகுதியில் வசிக்கும் இன்னொரு குடியிருப்பாளர் அஜய் சந்திலியா கூறுகையில், ''இந்தப் பகுதி தண்ணீரில் நிரம்பி வழிகிறது, மேலும் தண்ணீர் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. நூற்றுக்கணக்கான கட்டிடங்களுக்கு மேல் வெள்ளத்தில் மூழ்கி வருகிறது. வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் மீட்புப் பணிகள் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை. அருகில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது.'' என்றார்.

- ஏஎன்ஐ

SCROLL FOR NEXT