இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி

செய்திப்பிரிவு

பூஞ்ச்

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது.

இந்தியாவின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியத் தூதரையும் திருப்பி அனுப்பி, வர்த்தக உறவையும் தற்காலிகமாக ரத்து செய்தது.

மேலும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் - கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியனவற்றையும் ரத்து செய்தது. இறுதியாக டெல்லி, லாகூர் இடையே சென்ற பேருந்து போக்குவரத்தையும் நிறுத்தியது.

தொடர்ந்து சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்ட கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. அவை எதுவுமே பலனளிக்காத நிலையில், எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த, 2003ல், இந்தியா - பாக்., இடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பின்னர் பலமுறை பாகிஸ்தான் தாக்குதலை நடத்திவிட்டது.

கடைசியாக நேற்றிரவு 10.30 மணிக்கு பூஞ்ச் மாவட்டம் மேந்தார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. சிறிய ரக ஆயுதங்களைப் பயன்படுத்தியும், பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.

-ஏஎன்ஐ

SCROLL FOR NEXT