இந்தியா

முழுக் கொள்ளளவை எட்டுகிறது சர்தார் சரோவர் அணை

செய்திப்பிரிவு

அகமதாபாத்

குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் சரோவர் அணை தனது முழுக் கொள்ளளவை நாளை (செப்.17) எட்டவுள்ளது. இதனை பிரதமர் மோடி நேரில் பார்வையிடுகிறார். குஜராத் மாநிலத்தில் நர்மதை நதியின் மீது சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டுள்ளது. 1961-ம் ஆண்டில் இந்த அணைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், மத்தியப் பிரதேச அரசின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது.

பின்னர், நர்மதை தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் அனுமதியை பெற்ற பிறகும் கூட, பல்வேறு காரணங்களால் இந்த அணையை கட்டுவது தடைபட்டு கொண்டிருந்தது. இதையடுத்து, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு, இந்த அணை கட்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இருந்த போதிலும், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கல் நீடித்ததால், அணையை கட்டி முடிக்க தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில், 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றதும், அணையை கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, 2017-ம் ஆண்டுசெப்டம்பர் மாதம் சர்தார் சரோவர் அணை கட்டி முடிக்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இதனிடையே, அண்மைக்காலமாக குஜராத்தில் கனமழை பெய்து வந்ததால் சர்தார் சரோவர் அணைவேகமாக நிரம்பி வந்தது. தற்போது அதன் முழுக் கொள்ளளவான 138.68 மீட்டரை அது நாளைய தினம் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சர்தார்சரோவர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் காட்சியை, பிரதமர்
மோடி நாளை பார்வையிடவுள்ளார். அன்றைய தினம், மோடியின் 69-வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

- பிடிஐ

SCROLL FOR NEXT