காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம் 
இந்தியா

தனது பிறந்தநாளை முதல்முறையாக சிறையில் கழிக்கும் சிதம்பரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு திங்கிழமை(நாளை) 74-வது பிறந்ததினம்.

முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் முதல் முறையாக தனது பிறந்தநாளை சிறையில் கழிக்க உள்ளார்.

கடந்த 1945-ம் ஆண்டு, செப்டம்பர் 16-ம் தேதி சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் கிராமத்தில் சிதம்பரம் பிறந்தார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த மாதம் 21-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார்.

அதன்பின் 15 நாட்களுக்கும் மேலாக சிபிஐ காவலில் வைக்கப்பட்ட சிதம்பரத்தை கடந்த 5-ம்தேதி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரும் 23-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

அதேசமயம், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் அமலாக்கப்பிரிவிடம் சரண்அடைய விருப்பம் தெரிவித்த நிலையில், அமலாக்கப்பிரிவு தரப்பு நிராகரித்துவிட்டது. இதனால், நீதிமன்றம் சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த சூழலில் வரும் 19-ம் தேதிவரை சிதம்பரம் திஹார் சிறையில்தான் இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். சிதம்பரத்துக்கு நாளை 74-வது பிறந்தநாளாகும். வழக்கமாக தனது பிறந்தநாளை மனைவி, மகன், குடும்பத்தாருடன் உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் சிதம்பரம் கொண்டாடுவார்.

தனது இல்லத்தில் காங்கிரஸ் தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் சந்தித்துப் பேசிவார். பல்வேறுகட்சித் தலைவர்களை நேரில் சந்திப்பார், வாழ்த்துக்களைப் பெறுவார். ஆனால் இந்த முறை ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திஹார் சிறையில் இருப்பதால், தனது பிறந்தநாளை சிறையில்தான் முதல்முறையாக கழிக்க உள்ளார்.


ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT