பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

ஆந்திரா கோதாவரி ஆற்றில் 61 பேர் சென்ற படகு கவிழ்ந்தது: ஏராளமானோரைக் காணவில்லை: மீட்பு நடவடிக்கை தீவிரம்

செய்திப்பிரிவு

அமராவதி,

ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் 61 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் ஏராளமானோரைக் காணவில்லை, இதுவரை 10 பேர்வரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆந்திர மாநிலத்தில் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ணா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கோதாவரி ஆற்றில் 5 லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் செல்கிறது.

இந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டம், தேவிபட்டிணம் அருகே உள்ள கண்டி போச்சம்மா கோயிலுக்கு ஆந்திர மாநில சுற்றுலாக் கழகம் சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு இன்று நண்பகல் பாபிகொண்டலு பகுதியில் இருந்து 50 பயணிகள், 11 ஊழியர்களுடன் புறப்பட்டது, படகு கச்சளூரு பகுதியில் ஆற்றில் வந்தபோது, ஆற்றில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

படகு ஆற்றில் மூழ்கியதில் இதுவரை 10 பேர் மட்டும் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை. படகு ஆற்றில் மூழ்கிய தகவல் அறிந்ததும் 30 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணிக்காக விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதுதவிர தீயணைப்பு படையினர் போலீஸாரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். படகு கவிழ்ந்த தகவல் அறிந்ததும் மாநில தலைமைச் செயலாளர் எல்.வி. சுப்பிரமணியம், கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் முரளிதர் ரெட்டியை அழைத்து விபத்து குறித்து விசாரித்துள்ளார். தேடுதல் பணிக்காக ஹெலிகாப்டரை அனுப்பிவைப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் உறுதியளித்துள்ளார்.

கிழக்கு கோதாவரி போலீஸ் எஸ்.பி. அத்னன் நயீம் அஸ்மி கூறுகையில், "படகில் 50-க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளார்கள். இதுவரை 10 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளார்கள்.தேடுதல்பணி நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

SCROLL FOR NEXT