புதுடெல்லி
இந்தியாவின் பதிலடி தாக்குதலில் உயிரிழந்த பாகிஸ்தான் வீரரின் உடலை, அந்நாட்டு ராணுவம் வெள்ளைக்கொடி ஏந்தி சமாதானம் முயற்சியில் ஈடுபட்டு மீட்டுச் சென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த வீடியா காட்சிகளும் வெளியாகியுள்ளன.
காஷ்மீர் பிரச்னையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த 10-ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஹாஜிபூரில் இருந்து அந்நாட்டு ராணுவம் இந்திய நிலைகள் மீது பீரங்கியால் சுட்டு தாக்குல் நடத்தியது.
அப்போது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ரசூல் கொல்லப்பட்டார். இவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆவார். இதையடுத்து கொல்லப்பட்ட வீரரின் உடலை மீட்பதற்காக அந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இதனால் இருதரப்புக்கும் இடையே பதிலடி தாக்குதல் பல மணிநேரம் நீடித்தது. செப்டம்பர் 10-ம் தேதி இரவு முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை காலை வரை சண்டை நீடித்தது. இந்த தாக்குதலில் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரர் உயிரிழந்தார்.
இரண்டு நாட்களாக இருதரப்புக்கும் இடையே பதில் தாக்குதல்கள் தொடர்ந்ததால் உயிரிழந்த வீரரின் உடலை பாகிஸ்தான் ராணுவத்தால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 13-ம் தேதியான நேற்று பாகிஸ்தான் ராணுவம் தனது நடவடிக்கையில் இருந்து இறங்கி வந்தது. வெள்ளைக்கொடியை காட்டி சமாதான அறிவிப்பு வெளியிட்டது.
இதை ஏற்று உடனடியாக இந்திய ராணுவமும் தாக்குதலை நிறுத்தியது. பின்னர் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளைக்கொடியை ஏற்றியபடியே அந்நாட்டு வீரரின் உடலை மீட்டுச் சென்றது. பாகிஸ்தான் ராணுவம் தனது வீரரின் உடலை மீட்டுச் செல்லும் வரை பதில் தாக்குதல் நடத்தாமல் இந்திய ராணுவமும் அமைதி காத்தது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த ஜூலை மாதம் இதேபோன்ற தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். ஆனால் அவர்களது உடல்களை பெற்றுக் கொள்ள பாகிஸ்தான் மறுத்து விட்டது. அவர்கள் தங்கள் நாட்டு வீரர்கள் இல்லை என கூறியது.
அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார். அதேசமயம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த வீரர் உயிரிழந்தால் அவர்களது உடலை பாகிஸ்தான் பெற்றுக்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தில் பெரும்பாலான வீரர்கள் அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் ராணுவ தளபதிகளாக உள்ளனர்.