பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த உதயன்ராஜே போஸ்லே : படம் ஏஎன்ஐ 
இந்தியா

தேசியவாத காங்கிரஸ் எம்.பி. உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் முறைப்படி இணைந்தார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. உதயன்ராஜே போஸ்லே இன்று டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் முன்னிலையில் பாஜகவில் முறைப்படி இணைந்தார்.

சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்துள்ளார். மகாராஷ்டிராவில் சதாரா தொகுதி எம்.பி.யாக போஸ்லே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் குடும்பப் பரம்பரையில் வந்தவர் உதயன்ராஜே போஸ்லே. மகாராஷ்டிராவின் நலனுக்காகவும், தேசத்தின் நலனுக்காகவும் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டதாகவும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் போஸ்லே நம்பிக்கை தெரிவித்தார்.

புதுடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் உதயன்ராஜே போஸ்லே, தேசியத் தலைவர் அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அப்போது பாஜக தலைவர் அமித் ஷா பேசுகையில், " மராட்டிய அரசர் வம்சத்தைச் சேர்ந்த போஸ்லே பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது, அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போஸ்லேவின் இருப்பு கட்சிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும். இந்தத் தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியைக் காட்டிலும் பாஜக- சிவசேனா கூட்டணி சிறப்பான வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கூறுகையில், " போஸ்லே பாஜகவில் இணைந்தது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவை நீக்கியதை போஸ்லை வெகுவாகப் பாராட்டினார். பிரதமர் மோடியின் செயலுக்குப் பாராட்டு தெரிவித்தார்" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா, பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பிடிஐ

SCROLL FOR NEXT