மகாராஷ்டிர மாநில அமைச்சர் பங்கஜா முண்டே மீது மேலும் ஒரு முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜால்னா மாவட்டத்தில் அணை கள் கட்டுவதற்காக தொழிலதிபர் ரத்னாகர் கட்டேவுக்கு டெண்டர் ஏதும் இல்லாமல் ஒப்பந்தங்களை வழங்கியதாக அவர் மீது புதிய குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஒப்பந்தப் புள்ளிகள் கோராமலேயே, ரூ.206 கோடி அளவிலான ஒப்பந்தங்களுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு மகாராஷ்டிர மாநில மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு ஊழல் தடுப்புப் பிரிவு கடிதம் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிர அரசின் விதிமுறை களின்படி, ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான ஒப்பந்தங்களுக்கு இணையத்தில் ஒப்பந்தப்புள்ளி கோருவது கட்டாயமாகும்.
ஆனால், அவ்வாறு ஒப்பந்தப் புள்ளிகள் ஏதும் கோராமல் மொத்தம் ரூ.206 கோடி மதிப்பிலான 24 ஒப்பந்தங்களுக்கு ஒரே நாளில் அமைச்சர் பங்கஜா முண்டே அனுமதியளித்ததாக புகார் எழுந் துள்ளது.
மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி களின் சத்துணவு மையங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், தின்பண்டங்கள், புத்தகங்கள் ஆகியவை வாங்குவதும் இந்த ஒப்பந்தங்களில் அடங்கும்.
இந்நிலையில் அவர் மீது அணைகள் கட்டுவதற்கு டெண்டர் இல்லாமல் ஒப்பந்தங்களை வழங்கியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ள அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்துள்ளார். “நான் யாருக்கும் சாதகமாக நடந்து கொள்ளவில்லை. ரத்னாகர் கட்டே தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அனைத்து கட்சியினருக் கும் நன்கு அறிமுகமானவர். அணைகள் கட்ட அவருக்கு நான் ஒப்பந்தம் பெற்றுத்தந்ததாக கூறப்படுவது முற்றிலும் அடிப்படை ஆதாரம் அற்றது” என்றார்.
எனினும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் அவரது விளக்கத்தை நிராகரித்துள்ளது. பங்கஜா முண்டே மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.