பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி மோசடி செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியின் சகோதரரை கைது செய்ய இன்டர்போல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஃபயர்ஸ்டார் டயமன்ட் இன்க்., நிறுவனத்தை நடத்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,000 கோடி ரூபாய் மோசடி செய்ததற்காக, நீரவ் மோடி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த ஊழல் அம்பலமான நிலையில் அவர் தனது குடும்பத்தாருடன் வெளிநாடு தப்பிச் சென்றார். இந்நிலையில், அமலாக்கத்துறை மற்றும் இந்த வழக்கை விசாரிக்கும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) நீரவ் மோடி மீது ரெட் கார்னர் நோட்டீஸ் விநியோகிக்க இன்டர்போலிடம் கோரியது.
இதனையடுத்து அவரை லண்டன் போலீஸார் கைது செய்தனர். அவர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 19-ம் தேதிவரை அவருக்கு காவல் இருக்கிறது. இதுவரை அவர் பலமுறை ஜாமீன் கோரி விண்ணப்பித்தும்கூட அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நீரவ் மோடியின் சகோதரர் நேஹால் தீபக் மோடியை கைது செய்ய இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் விநியோகித்துள்ளது.
அமலாக்கத் துறை சர்வதேச சட்ட அமலாக்க முகமைகளுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெல்ஜிய நாட்டு குடியுரிமை கொண்ட நேஹால் தீபக் மோடி, ஃபயர்ஸ்டார் டயமன்ட் இன்க்., நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வந்துள்ளார். நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றிப் பெறப்பட்ட பணத்தைக் கொண்டு நிரவ் மோடிக்காக சொத்துகள் வாங்க தொடங்கப்பட்ட இடாச்சா பண்ட் நிறுவனத்திலும் நேஹால் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.
நீரவ் மோடி மோசடி செய்து சம்பாதித்த பணத்தை வெள்ளையாக்கும் வேலையை அவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் இருந்தவாறு செய்துவந்துள்ளனர் என்பதே நேஹல், மெகுல் சோஸ்கி மீதான பிரதான குற்றச்சாட்டு.
நீரவ் மோடிக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான பங்களா, மகாராஷ்டிராவின் அலிபாக் பகுதியில் கடற்கரைபரப்பை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.