லக்னோ
உத்தரப் பிரதேசத்தில் சட்ட மாணவி ஒருவர் மாயமான விவகாரத்தில் பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவிடம் போலீஸார் பல மணிநேரம் விசாரணை நடத்தினர்.
உத்தரப் பிரதேசத்தில் சட்ட மாணவி ஒருவர் மாயமான விவகாரத்தில் பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்தா மீது உத்தரப் பிரதேச போலீஸார் கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறை வைத்தல் வழக்குகள் பதிவு செய்தனர்.
முன்னதாக ஆகஸ்ட் 24-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள எஸ்.எஸ். சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில் தனது கல்லூரி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் சிலர் தன்னிடம் அத்துமீறியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த வீடியோவில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
ஆனால், "சன்த் சமாஜத்தின் ஒரு பெரியவர், பல்வேறு பெண்களின் வாழ்வை சீரழித்தவர் இப்போது என்னையும் கொலை செய்ய முயல்கிறார். அவர் எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். தயவு செய்து உதவுங்கள்’’ எனக் கூறியிருந்தார்.
இந்த வீடியோ வெளியான அடுத்த நாளே சட்ட மாணவி மாயமானார். அந்தப் பெண் பயிலும் கல்லூரியின் நிர்வாகக் குழுவின் தலைவராக சுவாமி சின்மயானந்தா இருக்கிறார்.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் தந்தை, சுவாமி சின்மயானந்தா பெயரைக் குறிப்பிட்டு தனது மகள் காணாமல் போன புகாரை பதிவு செய்துள்ளார். சின்மயானந்தா அதிகார பலமிக்கவர் அவரே எனது மகளை கடத்தியிருக்க வேண்டும் அவர் கூறினார்.
இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக உத்தர பிரதேச அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவினர் நேற்று கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, இந்த குழுவினர் நேற்று இரவு சின்மயானந்தாவின் ஆசிரமத்துக்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். 7 மணிநேரம் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்றது.