புதுடெல்லி,
டெல்லியைச் சேர்ந்த டிரக் ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
விபத்துகளைத் தடுக்கவும், உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் புதிய மோட்டார் வாகனத் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ள இந்தச் சட்டத்தில் கடுமையான அபராதம் விதிக்கும் அம்சங்கள் உள்ளன.
மதுபோதையில் வாகனம் ஓட்டினால், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால், போக்குவரத்து விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த கடுமையான அபராதம் விதிக்கும் முறைக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பும், வரவேற்பும் கலந்து இருக்கிறது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று ஒரு டிரக் ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை மீறி டிரக்கை இயக்கியதால் அவருக்கு ரூ.2 லட்சம் அபராதமாக போக்குவரத்து போலீஸார் விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா பதிவு எண் கொண்ட டிரக் ஒன்று முபாரா சவுக் பகுதியில் இருந்து பால்ஸ்வா பகுதிக்கு நேற்று முன்தினம் சரக்குகளுடன் சென்றது. அப்போது ஜஹாங்கிர்புரி அருகே டிரக் வந்தபோது, அந்த டிரக்கை போக்குவரத்து போலீஸார் நிறுத்தி ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த டிரக்கில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக 18 டன்கள் அளவுக்கு பாரம் ஏற்றி இருப்பதை போக்குவரத்து போலீஸார் கண்டுபிடித்தனர். மேலும் ஓட்டுநரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை, லாரியில் பதிவுச் சான்று இல்லை, விபத்துக் காப்பீடு இல்லை, தகுதிச் சான்று இல்லை, மாசுக் கட்டுப்பாடு சான்று இல்லை, ஓட்டுநர் சீட் பெல்ட் அணிந்திருக்கவும் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களை அந்த ஓட்டுநர் செய்திருந்தார்.
இதையடுத்து, பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களின் கீழ் அந்த ஓட்டுநருக்கு 2 லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
லாரியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி அதை மூடாமல் கொண்டுவந்தமைக்காக ரூ.20 ஆயிரம், ஆபத்தான அளவுக்கு பாரம் ஏற்றியதற்காக ரூ.36 ஆயிரம் அபராதம் என ஓட்டுநருக்கு மட்டும் ரூ.56 ஆயிரம் அபராதம், பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
டிரக்கின் ஓட்டுநருக்கு தனியாக ரூ.74,500 என மொத்தம் 2 லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபாராதத் தொகையை டெல்லியில் ரோஹினி பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று செலுத்தப்பட்டு டிரக் விடுவிக்கப்பட்டது.
ஏஎன்ஐ